Skip to content
Home » யாரால்?

யாரால்?

தமிழ் எழுத்தாளர் பா. ராகவனின் புத்தகங்களுடைய மின் பதிப்புகளை நிர்வகித்து வரும் bukpet.com தளம் தனது அடுத்தக்கட்ட முயற்சியாக எழுத்துப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்குகிறது.

தனது முப்பதாண்டுக் கால எழுத்து அனுபவங்களின் அடிப்படையில் பா. ராகவன் இதற்கெனப் பிரத்தியேகமாகப் பாடத் திட்டங்களை உருவாக்கியிருக்கிறார். மொபைல் யுகத்தில் ஃபேஸ்புக்கே ஆனாலும் ஒரு see more-ஐ அழுத்தி மேற்கொண்டு படிக்க விருப்பமில்லாமல், முதல் நான்கு வரிகளுடன் நகர்ந்து ஓடிவிடும் இந்தத் தலைமுறை வாசகரை இழுத்து நிறுத்தி வாசிக்க வைப்பது அவ்வளவு எளிதல்ல.

ஆனால் அநாயாசமாக இந்தத் தடைகளை எழுத்தின் மூலமே உடைத்தெறிந்து ஒவ்வொருவருக்குமான பிரத்தியேக வாசகர் வட்டத்தை அவரவரே அமைத்துக்கொள்ளும் அளவுக்கு எழுத்தில் நேர்த்தியும் தேர்ச்சியும் துலங்க இந்தப் பயிற்சி வகுப்புகள் மிக நிச்சயமாக உதவும்.

பா. ராகவனின் இந்த எழுத்துப் பயிற்சி வகுப்பு முப்பது மணி நேரங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு வார இறுதியிலும்  (சனி-ஞாயிறு) நான்கு மணி நேரங்கள் (இரு தினங்களும் தலா இரண்டு மணி நேரம்) நடைபெறும்.

இப்பயிற்சி வகுப்பில் புனைவு எழுத்து (Fiction writing), கட்டுரை எழுத்து (Non Fiction writing), புத்தகக் கட்டமைப்பு (Book Structuring), பத்திரிகை எழுத்து (Magazine writing), சமூக வலைத்தள எழுத்து (Social Media writing), தொலைக்காட்சித் தொடர்களுக்கான எழுத்து (Television Serial writing), அடிப்படை எடிட்டிங் நுட்பங்கள் (Editing), மற்றும் புத்தகப் பதிப்பு வழி முறைகள் (அச்சுப் பதிப்பு மற்றும் கிண்டில் பதிப்பு) ஆகியவை கற்றுத் தரப்படும்.

பத்திரிகை மற்றும் பதிப்புத் துறையில் ஆசிரியராக இருபதாண்டுகள் பணியாற்றியவரான பாரா, அக்காலக்கட்டத்தில் எழுத்தார்வம் மிக்க ஏராளமானவர்களுக்கு எழுதச் சொல்லிக் கொடுத்து புத்தகங்கள் எழுத வைத்திருக்கிறார். எழுத்து மற்றும் எடிட்டிங் பயிலரங்குகளை நடத்தியிருக்கிறார். அவரிடம் பயின்ற பலர் பிரபல எழுத்தாளர்களாக விளங்குகிறார்கள். ‘சொல்லித்தரும்’ பணியில் இருந்து பத்தாண்டுக் காலம் ஒதுங்கியிருந்தவர் இப்போது முழு வீச்சில் bukpet பயிற்சி வகுப்புகளை நடத்தித் தரவிருக்கிறார்.

எழுதச் சொல்லித்தரும் பல பயிற்சி நிறுவனங்கள் உலகளவில் நிறைய உண்டு. சல்மான் ருஷ்டி, ரஸ்கின் பாண்ட் போன்ற பல பிரபல எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு இத்தகைய வகுப்புகளை எடுக்கிறார்கள். தமிழில் இப்படி ஒரு முயற்சி எண்பதுகளில் ரா.கி. ரங்கராஜன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அதன் பிறகு இப்போது பாரா இதனை முற்றிலும் நவீனமான முறையில், ஆன்லைனில் ஆரம்பிக்கிறார்.

வகுப்பில் இணையும் அனைவருக்கும், சொல்லித் தரப்படும் அனைத்துப் பாடங்களும் பாட நூலாகவும் (மின்நூல் வடிவில்) வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு class@bukpet.com மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும்.

வகுப்பில் சேர இங்கே பதிவு செய்யவும்.