Skip to content
Home » Blog » அடிப்படைகளை அறிந்துகொள்வோம் – முத்து காளிமுத்து

அடிப்படைகளை அறிந்துகொள்வோம் – முத்து காளிமுத்து

எழுத்துப் பயிற்சி வகுப்பின் முதல் அணி மாணவர்களுள் ஒருவரான முத்து காளிமுத்து தமது அனுபவங்களை விவரிக்கிறார்:

 

ஆங்கிலத்தில் மாஸ்டர் கிளாஸ் மூலம் எழுதுதல் பற்றி கற்றுக் கொள்ளலாம் என்று இருந்தாலும், தமிழில் மூத்த எழுத்தாளர் பாரா சாரிடம் நேரிடையாக இணைய வகுப்புகளில் கற்று கொள்ளக் கிடைத்தது, மிகப் பெரிய வாய்ப்பு. தமிழில் இதற்கு முன்பு இப்படி ஒரு பயிற்சி வகுப்பு நிகழ்வு நடந்த மாதிரி நினைவில்லை எனக்கு. எழுத்துப் பயிற்சி வகுப்புகள் குறித்து Bukpet-writeRoom தளத்தில், அவருடைய முகநூலில் அறிவிப்பு வந்தவுடன் முதல் ஆளாகப் பதிவு செய்து கொண்டேன். முதலில் புனைவு எழுத்துக்கு மட்டும்தான் கலந்து கொள்ளப் பதிவு செய்திருந்தேன். வாய்ப்பை முழுதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கருதி, பிறகு எல்லா வகுப்புகளுக்கும் பணம் கட்டிக் கலந்து கொண்டேன்.

முதல் வகுப்பான சிறுகதை பயிற்சி வகுப்பில் சிறுகதை எழுதுவதற்கான அடிப்படை விதிகள், இலக்கணங்களை விளக்கிச் சொல்லிக் கொடுத்தார். நல்ல எழுத்து எது என்பதைச் சொல்லிக்கொடுக்கும்போது, தவறான எழுத்து எது, எப்படித் தவிர்ப்பது என்பதற்குப் பல குறிப்புகள் கொடுக்கப்பட்டன.

புனைவல்லாத பிற சமூக வலைத்தள எழுத்து, பத்திரிகை எழுத்து, நாவல் மற்றும் எடிட்டிங் என ஒவ்வொன்றுக்கும் அதற்கான விதிகள் மிகத் தெளிவாக, பல உதாரணங்களோடு சொல்லிக் கொடுக்கப்பட்டது. சில வகுப்புகளில் நிர்ணயிக்கிப்பட்ட இரண்டு மணி நேர அளவைத் தாண்டிச் சென்றாலும் பொறுமையாகச் சொல்லிக் கொடுத்தார். எங்களுக்கு எல்லாவற்றையும் கற்றுத் தரவேண்டும் என்று ஆர்வம் அவருக்கு அதிகம் இருந்தது புரிந்தது. முப்பது வருட எழுத்து அனுபவம், அதில் இருபது வருடம் எடிட்டர் ஆக வேலை செய்த அனுபவம் என்று அவரிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன.

சார் சிரித்த முகத்துடன் பாடங்களை சொல்லி கொடுப்பது தனி அழகு. ஒவ்வொரு வகுப்பு இறுதியிலும் கேள்வி நேரம் என்று அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் சில சமயம் அது இந்த அரைமணி நேரத்தைத் தாண்டிச் சென்றாலும், மிகப் பொறுமையாக சிரித்த முகத்துடன் சொல்லிக் கொடுத்தார்.

வகுப்பின் இறுதியில் அடுத்த வகுப்புக்கு முன்பாகச் செய்து வர வேண்டிய பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன. தனித் தனியாக ஒவ்வொருவர் எழுதி வந்ததையும் வாசிக்கச் சொல்லி, அதில் திருத்தங்கள் சொல்லிப் புரிய வைத்தார். நல்லதொரு அனுபவம்.

எடிட்டிங் வகுப்பைப் பற்றி தனியாகச் சொல்லியே ஆக வேண்டும். எடிட்டிங் பற்றி மட்டும் நான்கு வகுப்புகள் எடுக்கப்பட்டன. எழுத்து வேறு, எடிட்டிங் வேறு என்றுதான் எங்கும் சொல்லிக் கொடுக்கப்படும் என்று நினைக்கிறேன். எழுத்து வேலை முடிந்த பிறகு எடிட்டர் எப்படி எல்லாம் அதில் திருத்தம் செய்ய வேண்டும் என்பதை சார் சொல்லிக்கொடுக்கும் போது, எழுத்து என்பது எவ்வளவு சீரியசான விஷயம் என்பது புரிந்தது. இந்த அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளாமல் நாம் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தால், வாசர்களை நம் தவறான எழுத்தால் கொடுமை செய்கிறோம் என்றுதான் சொல்வேன்.

எல்லா வகுப்பும் முடிந்த பிறகும், நாங்கள் யாரும் கேட்காமலே எங்கள் கேள்வி பதில்களுக்கான தனி வகுப்பு வாய்ப்பு ஒன்றை அமைத்துக் கொடுத்தார். கலந்து கொண்ட அனைவரும் வருங்காலத்தில் எழுத்தில் ஜொலிக்க வேண்டும் என்ற அவருடைய அக்கறையைப் புரிந்து கொள்ளமுடிந்தது.

இந்த எல்லா பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொண்டவர்கள் உடனே பெரிய எழுத்தாளர்கள் ஆகிவிடலாம் என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், எப்படி எழுத வேண்டும், என்ன தவறு செய்யக் கூடாது என்ற அடிப்படைப் புரிதல் இந்த வகுப்புகளின் மூலம் நிறையவே கிடைத்தது. அதுதான் இந்த பயிற்சி வகுப்புக்கான வெற்றி என்று சொல்வேன். இந்த அடிப்படையைச் சரியாகக் கற்றுக்கொண்டு, எழுத்தில் வெற்றி பெறுவது என்பது நம் கையில் இருக்கிறது.

எழுத்தில் ஆர்வம் உள்ளவர்கள் கண்டிப்பாகக் கலந்து பயன் பெற வேண்டும் என்றுதான் பரிந்துரைப்பேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *