பத்தி 1
எல்லோருக்கும் கிரிக்கெட் விளையாடத் தெரியும். தெருவில் ஒரு கட்டையையும் ரப்பர் பந்தையும் வைத்துக் கொண்டு நாம் எல்லாருமே விளையாடி இருப்போம். பள்ளி அணியிலோ கல்லூரி அணியிலோ விளையாடிய அனுபவம் கூட சிலருக்கு இருக்கலாம். ஆனால் கிரிக்கெட் வீரராகப் பரிமளிக்க வேண்டும் என்றால் முறையாகக் கற்றுக் கொள்வது அவசியம். விளையாடும் முன் நம்மை எப்படித் தயார் செய்து கொள்ள வேண்டும், அணியில் நம் பங்கு என்ன, அதனைத் திறம்படச் செய்ய நம்மிடம் என்ன இருக்க வேண்டும், அதை அடைய நாம் செய்ய வேண்டிய முயற்சிகள் என்ன, மைதானத்தில் நுழைந்தால் எங்கு நிற்க வேண்டும், எப்படி நிற்க வேண்டும், எங்கு ஓட வேண்டும், மட்டையை எப்படிப் பிடிக்க வேண்டும், எப்பொழுது எந்த விதமான பந்தை வீச வேண்டும் என இலக்கை நோக்கிச் செல்ல வேண்டிய ஒவ்வொரு படியைப் பற்றிய தெளிவு நமக்கு இருக்க வேண்டும்.
பத்தி 2
எல்லாரும் ஒன் பிட்ச் கிரிக்கெட் ஆடி இருப்போம். ஆனால் ஒன் டே கிரிக்கெட் விளையாட அதற்கான பயிற்சி வேண்டும். அதன் விதிகள் பற்றிய புரிதல் வேண்டும்.
—
முதல் பத்தியின் நீளம் கிட்டத்தட்ட நூறு சொற்கள். இரண்டாவதில் இருபது சொற்கள் கூட இல்லை. ஆனால் முதல் பத்தி சொல்லும் அனைத்தையும் சொல்லிவிடுகிறது. படிப்பவர்களைக் கவர்வது இரண்டாம் பத்திதான் என நிச்சயமாகக் கூற முடியும்.
நல்ல எழுத்திற்கு எளிமை, சொற்சிக்கனம், பயன்பாட்டில் உள்ள சொற்கள், எழுத்தில் ஒழுங்கு என பல தேவைகள் உண்டு. எப்படி எழுத வேண்டும், எழுதியதை எப்படித் திருத்த வேண்டும், எழுத்தில் எத்தனை வகைகள் உண்டு, எங்கே எப்பொழுது எப்படி எழுத வேண்டும் என்பதை வருடக் கணக்காகத் தொடர்ந்து எழுதி அனுபவபூர்வமாகக் கற்றுக் கொள்ளலாம். அல்லது ஒரு ஆசிரியரின் துணை கொண்டும் கற்றுக் கொள்ளலாம்.
தமிழில் எழுதக் கற்றுத் தருவது என்பது மிக அரிதாகவே நடக்கும் ஒரு செயல்.
எழுத்தாளர் பாரா தொடங்கி இருக்கும் தமிழ் எழுத்துப் பயிற்சி வகுப்புகள் அவரின் முப்பதாண்டு கால அனுபவத்தை எழுத ஆர்வம் கொண்டவர்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி. அவ்வகுப்புகளின் முதல் பேட்ச்சில் சேரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
ஒரு கிரிக்கெட் கோச் களத்தில் இறங்கிச் சொல்லித் தருவது போல், எழுத்துக்கான விதிகளை, தனது எழுத்துப் பயிற்சி வகுப்புகளில் எழுத்தாளர் பாரா சொல்லி தந்தார். தகுந்த உதாரணங்களுடன் விளக்கியது இவ்விதிகளைப் புரிந்து கொள்வதை எளிதாக்கியது. கலந்து கொண்டவர்களை எழுத வைத்து, பின் அவற்றை திருத்தியது எங்கே தவறுகள் நிகழலாம் அவற்றைக் களைவது எப்படி என்பதை உணரச் செய்தது.
சிறுகதை, நெடுங்கதை, நாவல், Non Fiction, பத்திரிகைக்கான எழுத்து, Editing என எழுத்தின் அத்தனை பரிமாணங்களையும் தொட்டுச் செல்லும் வகையில் இவ்வகுப்புகளின் உள்ளடகத்தை தயார் செய்திருக்கிறார். முப்பது மணி நேரம் தொய்வில்லாமல் சென்றது அவர் கற்றுத் தரும் பாணியின் வெற்றிதான். வெறும் பாடமாக இல்லாமல் தொடர்ந்து கருத்துப் பரிமாற இடம் தந்தது மாற்றுக் கருத்துகளை அறிந்து கொள்ளவும் உடனுக்குடன் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும் வழி வகுத்தது.
பத்து மணி நேரம் நடந்த எடிட்டிங் பற்றிய வகுப்புகள்தான் எனக்கு மிகவும் பிடித்தவை.
எழுத ஆர்வமுடையவர்கள், பதிவர் என்பதில் இருந்து எழுத்தாளர் என அடுத்த படிக்கு நகர ஆசைப்படுபவர்கள், கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய வாய்ப்பு இவ்வகுப்புகள்.
விவரங்களுக்கு class@bukpet.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
(ராஜேஷ், பயிற்சி வகுப்பில் முதல் அணியில் பங்குபெற்றவர்.)