Skip to content
Home » Blog » உத்தி, புத்தி, சித்தி

உத்தி, புத்தி, சித்தி

எழுதத் தொடங்கிய காலத்தில் வாசனை திரவிய மொழிக்கு அடுத்தபடி என்னை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த இன்னொரு கெட்ட சக்தி, உத்திகள். பொதுவாக இறக்குமதிப் பொருள்களின் மீது நமக்கு மோகம் அதிகம். தேவை இருந்து பயன்படுத்துவது வேறு. அரிசிச் சோறெல்லாம் ஆகாது; தினசரி மூன்று வேளை ஜாங்கிரி பிழிந்துதான் சாப்பிடுவேன் என்பது அழிச்சாட்டியம் அல்லாமல் வேறல்ல.

ஆனால் அது ஒரு போதை. எழுத்தைத் தவிர வேறெதுவும் எனக்கில்லை என்னும் மனநிலையில், படிப்பதும் எழுதுவதுமாக மட்டுமே வாழ்வோரை ஏதோ ஒரு கட்டத்தில் அது எட்டித் தொடும். தவிர்க்க முடியாது.

அசோகமித்திரனைப் படித்து, மொழி அலங்காரங்களைக் கைவிட முடிந்தது போல உத்தி மயக்கத்தில் இருந்து வெளியே வருவது அவ்வளவு எளிதாக இல்லை. கோணங்கி நடத்தி வந்த கல் குதிரை, காபிரியேல் கார்சியா மார்க்வெஸுக்கு ஒரு சிறப்பிதழ் கொண்டு வந்தது. அதை வாசித்த அதே காலக் கட்டத்தில்தான் தமிழவனின் ‘ஏற்கெனவே சொல்லப்பட்ட மனிதர்கள்’ நாவலைப் படித்திருந்தேன். இந்தப் பக்கம், இரா. முருகன் கனவில் நடக்கிறதா நிஜத்தில் நடக்கிறதா என்றே கண்டுபிடிக்க முடியாததொரு மாயப் பெருவெளியில் என்னென்னவோ செய்துகொண்டிருந்தார். எனக்கு எம்.ஜி. சுரேஷின் மொழி பிடிக்கும். தமிழ் வாசகர்கள் அவரை ஏனோ பெரிதாகக் கவனிக்கவில்லை. பரீட்சார்த்த நாவல்கள் என்னும் புதியதொரு இனமே தமிழில் அவரால் உற்பத்தி செய்யப்பட்டது. அவருடைய ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். எல்லாமே பரீட்சைகள். பெரும்பாலும் விஷப் பரீட்சைகள். ஆனால் கோணங்கி எழுதியதைப் போலப் படிக்க முடியாத எழுத்தல்ல. சுரேஷை வேகமாகவே படிக்க முடியும். ஆனாலும் அவர் கையாண்ட பல்வேறு உத்திகளே அவர் பரவலாக வாசிக்கப்படுவதற்குத் தடையாக அமைந்துவிட்டனவோ என்று எனக்குப் பிற்காலத்தில் தோன்றியது.

ஆனால், அன்றைக்கல்ல. அன்று உத்திகளின் மாய வசீகரப் பிடியில் நான் வலுவாக அகப்பட்டிருந்தேன். அந்நாள் வரை நான் எழுதிக்கொண்டிருந்த மொழியும் கருப் பொருள்களும் போலித்தனமானவை; பிழை பட்டவை என்ற எண்ணம் மேலோங்கி இருந்தவன், முற்றிலும் புதிய பதிப்பாக என்னை ஒரு மறு வெளியீடு செய்ய முடிவு செய்தேன்.

சுமார் ஐந்தாறு மாத இடைவெளியில் பதினொரு கதைகள் எழுதினேன். எதையும் எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பவில்லை. அவற்றை யாரும் வெளியிடமாட்டார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. எனவே, நேரடியாகப் புத்தகமாக்கிவிட முடிவு செய்தேன்.

அன்று என்னுடைய அம்முயற்சிக்கு ஒரு சிறிய, குடிசைத் தொழில் பதிப்பகத்தார் உதவி செய்ய முன் வந்தார்கள். பதிப்பாளருக்கு இலக்கியம் தெரியாது என்பதை நான் ஒரு நல்ல சகுனமாக எடுத்துக்கொண்டேன். அவர்கள் சோதிடம், சமையல், வாஸ்து, பட்சி சாத்திரம் போன்ற புத்தகங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். அவை நன்றாக விற்கக் கூடிய புத்தகங்கள். அந்தப் பதிப்பகத்துக்குப் பெரிய வியாபார வலைப் பின்னல் இல்லாவிட்டாலும், வேறொரு பெரிய பதிப்பு நிறுவனத்தின் வாலாக ஒட்டிக்கொள்ள ஒரு வசதி இருந்தது. அதாவது, அப்பெரிய பதிப்பு நிறுவனம் தனது வெளியீடுகளை சந்தைக்கு அனுப்பும்போது இந்தச் சிறு பதிப்பாளரின் புத்தகங்களையும் சேர்த்து அனுப்பும்.

யார் அனுப்பினால் என்ன? புத்தகங்கள் போய்ச் சேர வேண்டும். நன்கு விற்க வேண்டும். இத்தகு காரணங்களை உத்தேசித்து, என்னுடைய அந்தக் கதைத் தொகுப்பை நான் அப்பதிப்பாளரிடம் வெளியிடச் சொல்லிக் கேட்டுக்கொண்டேன். தொகுப்புக்குப் ‘பறவை யுத்தம்’ என்று பெயரிட்டிருந்தேன். அதை ஒரு நல்ல பட்சி சாத்திர சகுனமாக அவர் கருதியிருக்கலாம். ஆனால் வெறும் பதினொரு கதைகளைக் கொண்டு ஒரு தொகுப்பு எப்படி முடியும்? இன்னும் நான்கு கதைகளாவது தாருங்கள் என்று கேட்டார். நானோ, எழுதிய பதினொரு கதைகளில் இரண்டை உருவி எடுத்துவிட்டு ஒன்பது கதைகள் போதும் என்று சொல்பவனாக இருந்தேன்.

ஒரு வல்லூறின் ஒற்றைச் சிறகையும் ஒரு பக்கத்து மூக்கையும் ஒற்றைக் கண்ணையும் மிக நெருக்கமாகக் காட்டக்கூடிய நவீனமான அட்டைப்படம் ஒன்றை என் நண்பரும் ஓவியருமான ராஜன் வரைந்து தந்திருந்தார். பதிப்பாளருக்கு அந்த அட்டைப் படம் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பறவைதான் அட்டையில் இடம் பெற வேண்டுமென்றால் ஒரு தடாகத்தில் நீந்தும் அன்னப் பறவைகளை வரையலாம் என்று தயங்கித் தயங்கிச் சொன்னார். குமுதம் இதழின் முதல் அட்டைப்படத்தில் அதுதான் இடம் பெற்றிருந்தது என்றும், என் தொகுப்பும் குமுதம் போலவே பல லட்சம் விற்கும் என்றும் சொல்லிப் பார்த்தார்.

‘என்ன பேசுகிறீர்கள்? இது கருடன். மகா விஷ்ணுவின் வாகனம். இதைக் காட்டிலும் மங்கலம் ஒன்று இருக்க முடியுமா?’ என்று நான் பதிலுக்குக் கேட்டேன்.

‘ஓ. அப்படிச் சொல்கிறீர்களா? அப்படி என்றால் மகா விஷ்ணுவையும் சேர்த்து வரைந்துவிடலாமே?’

அவர் விடுவதாக இல்லை.

‘கண்ணுக்குப் புலப்படாத வரைதான் கடவுள். தெரிந்துவிட்டால் ஒன்றுமில்லை’ என்று சொல்லி ஒருவாறாக அவர் வாயை அடைத்துப் புத்தகத்தை அச்சுக்கு அனுப்ப வைத்தேன்.

அந்த சிறுகதைத் தொகுப்பின் பதிப்புக்கு அவர் எவ்வளவு பிரதிகள் அச்சிட்டார் என்று எனக்குத் தெரியாது. எனக்கு பத்துப் பிரதிகள் கொடுத்தார். அதில் நான்கை இரண்டு போட்டிகளுக்கு அனுப்பி வைத்தேன். இரண்டிலும் பரிசு கிடைத்தது. கணையாழி, ஆரண்யம், படித்துறை என்று அன்று வெளிவந்துகொண்டிருந்த சில சிற்றிதழ்களில் மதிப்புரைகள் வெளியாயின. அசோகமித்திரன் அந்தத் தொகுப்பைத் தனியே குறிப்பிட்டுக் கணையாழியில் ஒரு பத்தி எழுதினார். ஏதோ நல்லது நடந்துவிடும் என்பது போலத்தான் இருந்தது. அப்படி ஏதாவது நடந்தால் கைவசம் கொஞ்சம் பிரதிகள் இருப்பதுதான் நல்லது என்று நினைத்து, பதிப்பாளரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். முடியவில்லை.

நேரில் சென்றபோது அவரது கடை மூடியிருந்தது. பிறகு இரண்டொரு முறை நேரில் சென்றும் அவரைச் சந்திக்க முடியவில்லை. அந்த வருடம் புத்தகக் காட்சியில்கூட அவரைக் காண முடியவில்லை. அதன்பின் அவர் என்ன ஆனார், எங்கே போனார் என்று எனக்குத் தெரியாது.

நான் சிறிது நல்லவனாக இருந்திருக்கலாம். தடாகத்தில் நீந்தும் அன்னப் பறவைகளின் சித்திரத்தை அட்டையில் இடம் பெறச் செய்திருந்தால் அவர் சொன்னது போல தொகுப்பு நிறைய விற்றிருக்கலாம். எனக்கு நல்லதோ இல்லையோ, அவர் தொழிலை விட்டுவிட்டுக் காணாமல் போக நேர்ந்திருக்காது.

இருக்கட்டும். அந்தத் தொகுப்பில் இருந்த கதைகளைக் குறித்து சில சொற்கள் சொல்ல வேண்டும். அதில் இரண்டு கதைகள் மாய யதார்த்த வகையைச் சேர்ந்தவை. ஒரு கதை மாந்திரிக யதார்த்தம். சர் ரியலிசக் கதைகள் இரண்டு. க்யூபிசக் கதை ஒன்று. நெடுங்கதை ஒன்று, பாதி யதார்த்த பாணியிலும் மீதி மாயா ஜாலக் கதை வடிவிலும் இருக்கும். முற்றிலும் முன்னிலையில் (Second Person) எழுதப்பட்ட கதை ஒன்று இறுதியாக.

இவை மிகச் சரியான கணக்கல்ல. நினைவில் இருந்து எழுதுகிறேன். கம்ப்யூட்டர் அறியாத காலத்தில் எழுதிய கதைகள் என்பதால் இன்று கையெழுத்துப் பிரதிகள்கூட என்னிடம் இல்லை.

மொழி அலங்காரங்கள் களைந்த, அதே சமயம் தீவிரமான உத்தித் தாக்குதலுக்கு உட்பட்ட அக்கதைகள், கருப்பொருள் அளவில் ஓரளவு மேம்பட்ட தரத்தைச் சார்ந்தவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் என்னைப் போலவே அன்றைய இலக்கிய உலகின் பெரும்பாலான புதியவர்கள் கடும் உத்தி மயக்கத்துக்கு ஆளாகியிருந்தபடியால் அதைச் சொல்லிச் சொல்லியே அத்தொகுப்பைப் பிரபலப்படுத்தினார்கள். வெளியான மதிப்புரைகளிலும் மறக்காமல் நான் கையாண்ட உத்திகளைப் பற்றிக் குறிப்பிட்டார்கள்.

எனக்குப் பெருமை பிடிபடவில்லை. எளிதில் பிரபலமாவதற்கு உத்திகள் அடர்ந்த கதைகளை எழுதுவதே சரியான வழி என்று தோன்றியது. இதில் இன்னொரு லாபமும் இருந்தது. இவனை ஒரு வரிகூடப் பாராட்டக் கூடாது என்ற கொள்கை முடிவில் இருந்தவர்கள்கூட, குறைந்தபட்சம் திட்டாமலாவது இருந்தார்கள். நன்றாக இருக்கிறது என்றும் சொல்லாமல், மோசம் என்றும் திட்டாமல் நட்ட நடுவாந்தரமாக வெளியான சில மதிப்புரைகள் எனக்கு மிகவும் சாதகமாக அமைந்தன. அவை, பாராட்டிவிடக் கூடாது என்ற கவனத்துடன் எழுதப்பட்ட மதிப்புரைகள் என்பது மேலோட்டமான வாசிப்பிலேயே புரிந்துவிடும் என்பதால் பல அனுதாப ஓட்டுகளும் எதிர்பாராமல் விழுந்தன.

அடுத்தத் தொகுப்புக்கு நேரே காலச்சுவடுக்குப் போய்விடலாம் என்று எண்ணிக் கிளுகிளுப்படைந்தேன்.

எதிர்பாராத ஒரு நாளில் சா. கந்தசாமி போன் செய்தார். ‘படிச்சேன். நல்லா எழுதியிருக்கிங்க. ஒம்பதுல அஞ்சு தேறிடும். ஆனா உத்தியக்கூட கதை டிமாண்ட் பண்ணாத்தான் பயன்படுத்தணும். உத்திக்காகக் கதை தேடக் கூடாது’ என்று சொன்னார்.

பத்துப் பதினைந்து நாள் இடைவெளியில் அசோகமித்திரனை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்ற ஒரு இலக்கியக் கூட்டத்தில் சந்திக்க நேர்ந்தது. ‘எனக்கு சமர்ப்பணம் பண்ணியிருக்கியே? இந்த மாதிரி கதையெல்லாம் என்னால முடியாது’ என்று சொன்னார்.

‘முடியாதுன்னா?’

‘என்னைப் பார். குச்சி மாதிரி இருக்கேன். தலைக்கு மேல தூக்கிண்டு திரிஞ்சேன்னா நசுங்கிப் போயிடுவேன். நீ தாங்குவ. இல்லேன்னா உன் சைஸ் தாங்கும்’ என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

அவர் சொன்னது சரி. சுமைதான். சந்தேகமே இல்லை. அதையும் இறக்கி வைத்த பிறகுதான் சரியாக நடக்கவே முடிந்தது.

பறவை யுத்தம் தொகுப்பின் ஒரு பிரதிகூட இன்று என்னிடம் இல்லை. என் பெயர் பரவலாவதற்கு உதவிய தொகுப்பு என்ற வகையில் எனக்கு அது முக்கியமானது. ஆனால் அது இல்லாமல் போனது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை என்றே எடுத்துக் கொள்கிறேன். யாருடைய திட்டம் என்று யோசித்தால் ஒரு கதை கிடைக்கும். ஆனால் அதுவும் ஏதோ ஓர் உத்திக்குள் உட்கார்ந்துவிடக் கூடியதாகவே இருக்கும். அதனால் கூடியவரை அதை நினைக்காதிருக்கவே விரும்புகிறேன்.

 

(வெளிவர இருக்கும் பா.ராகவனின் ‘எழுதுதல் பற்றிய குறிப்புகள்’ புத்தகத்தில் இருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *