ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம், இரண்டாம் ஆண்டு நாவல் போட்டிக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. bukpet-writeRoom நாவல் வகுப்புகளில் கலந்துகொண்டவர்களுள் எத்தனைப் பேர் இப்போட்டிக்கு எழுதப் போகிறார்கள்? அறிய ஆவலாக இருக்கிறேன்.
ஒன்று செய்வோம். இது, இதுவரை வகுப்புகளில் கலந்துகொண்ட ஐம்பது மாணவர்களுக்கும் பிப்ரவரி வகுப்புகளில் சேரவிருப்பவர்களுக்கும் மட்டும். நானறிந்த வரை, முறையான மூன்று கட்டத் தேர்வு, இறுதி வரை நடுவர்களுக்குக் கூட எழுதியவர் யாரென்று அறிவிக்காதிருக்கும் ஒழுக்கம், வெளிப்படையான நடைமுறை எல்லாம் கூடி நடக்கும் போட்டி இது. சென்ற ஆண்டு அப்படித்தான் நடந்தது. இந்த ஆண்டும், இனி எப்போதும் அப்படித்தான் நடக்கும் என்று நம்புகிறேன்.
இந்தப் போட்டியில் நமது பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட / கலந்துகொள்ளும் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்பது என் விருப்பம். எழுத்தில் உங்கள் இருப்பிடத்தை நீங்களே உணர இது ஒரு வாய்ப்பு.
நான் என்ன செய்யலாம்? உங்களுக்கு உதவலாம். போட்டியிலோ, பரிசளிப்பிலோ அல்ல. அதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு நாவலுக்கான மனநிலையை உருவாக்குவதில். உங்களுடைய கருப் பொருளைச் செழுமைப்படுத்துவதில். ஓர் எண்ணம், நாவலாக விரிவு கொள்ளும் வழியைச் சுட்டிக் காட்டுவதில்.
நீங்கள் என்ன செய்யலாம்? போட்டியில் கலந்துகொள்ள முடிவு செய்பவர்கள் தமது நாவல் யோசனையைச் சுருக்கமாக எனக்கு எழுதி அனுப்பலாம். பிப்ரவரி மாத வழக்கமான நாவல் வகுப்புகளுடன் இதற்கான சிறப்பு வகுப்பு ஒன்றை ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறேன். அதற்குக் கட்டணம் கிடையாது. நாவலுக்கான திட்டத்தை எழுதி அனுப்பும் மாணவர்கள் மட்டும் அந்த வகுப்புக்கு அழைக்கப்படுவார்கள். நாவல் போட்டியில் பங்கேற்க உங்களை ஆயத்தம் செய்யும் விதமாக அவ்வகுப்பு அமையும்.
குறிப்புகள்:
1. இந்த வாய்ப்பு நிச்சயமாக நமது எழுத்துப் பயிற்சி வகுப்புகளில் இதுவரை கலந்துகொண்ட ஐம்பது மாணவர்களுக்கும் பிப்ரவரி மாத வகுப்புகளில் சேர்வோருக்கும் மட்டுமே.
2. பிறருக்கு அனுமதி இல்லை.
3. விண்ணப்பிப்போர், தங்களது நாவல் யோசனையை para@bukpet.comக்கு அனுப்பி வைக்கவும்.
4. ஐடியா அனுப்பாமல் வெறுமனே வகுப்புக்கு வர அனுமதி இல்லை.
5. இந்தச் சிறப்பு வகுப்புக்குக் கட்டணம் கிடையாது. வகுப்பில் கலந்துகொண்டவர்களை நாவல் எழுத ஊக்குவிக்கவும், ஒரு குறிப்பிட்ட நாவல் கருவை முன் வைத்து, எழுதும் முறையினை விவாதித்துச் செழுமை சேர்க்கவும் மட்டுமே இந்நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்படுகிறது.