Skip to content
Home » Blog » முதல் பாடம்

முதல் பாடம்

bukpet வழங்கும் WriteRoom எழுத்துப் பயிற்சிக் கூடத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

எழுத்தார்வம் ஒன்றைத் தவிர வேறு திறமையோ, அறிவோ, படிப்போ, பின்புலமோ இல்லாமல் திரிந்துகொண்டிருந்தவன் நான். என் பெரியப்பாவின் சிபாரிசால் எனக்கு 1989ம் ஆண்டு அமுதசுரபி மாத இதழில் வேலை கிடைத்தது. 400 ரூபாய் சம்பளம். அங்கே தட்டுத் தடுமாறி எழுதப் பழகிக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் ம.வே. சிவகுமாரின் தொடர்பும் நட்பும் தாம்பரம்-கடற்கரை ரயில் பயணத்தின்போது தற்செயலாக வாய்த்தது.

சிவகுமார்தான் எனக்கு முதல் முதலில் முறைப்படி எழுதச் சொல்லிக் கொடுத்தது. அந்த வகையில் அவர் என் முதல் குரு.

பிறகு தாய் வார இதழில் சிறிது காலம் ரிப்போர்ட்டிங் செய்துகொண்டிருந்தேன். அப்போது அங்கு ஆசிரியராக இருந்தவர் திரு. ரகுநாத். நான் சரியாக எழுதுகிறேன் என்று கண்டுபிடித்துச் சொன்னவரும், எழுத்தில் நேர்த்திக்கான அடிப்படை போதனைகளை வழங்கியவரும் அவரே.

பிறகு நான் எழுதிய ஒரு சிறுகதை என்னைக் கல்கிக்கு இட்டுச் சென்றது. எட்டாண்டுக் காலம் கி. ராஜேந்திரன், சீதா ரவி, இளங்கோவன் ஆகியோரிடம் இதழியல் பயின்றேன். நான் தமிழ் இலக்கணம் கற்றது அங்கேதான். தெளிவாக எழுதக் கற்றது அங்கேதான். எவ்வளவு நுணுக்கமான, தீவிரமான, சிக்கல் மிகுந்த விஷயமானாலும் நான்கு வரியில் அதைப் புரிய வைத்துவிடும் நுட்பம் பயின்றது அங்கேதான். மொழியை ஒரு வளர்ப்பு நாய்க்குட்டி போலப் பழக்கி வைத்துக்கொள்வது ஒரு கலை. அதைச் சரியான விதத்தில், சரியான தொனியில், சரியான அளவில் பயன்படுத்துவது ஒரு நுட்பம். இந்த சூட்சுமங்கள் யாவும் எனக்குக் கல்கி போதித்தவை.

பிறகு நிறைய படித்தேன். நிறைய எழுதிப் பார்த்தேன். இன்று வரை நான் சலிக்காமல் செய்துகொண்டிருக்கும் இரண்டு காரியங்கள் இவை மட்டுமே. அடிப்படை எழுத்து கைவரப் பெற்ற பிறகு வித விதமாகக் கதைகள் எழுதிப் பார்த்தேன். அசோகமித்திரன், தி.க.சி., இந்திரா பார்த்தசாரதி, வெங்கட் சாமிநாதன், சா. கந்தசாமி என்று அன்றிருந்த ஒரு நல்ல தலைமுறை என்னை அரவணைத்து அவ்வப்போது நிறைய சொல்லித் தந்தது. நான் கற்ற பாடங்களைப் பிறகு நான் ஆசிரியரானபோது என்னிடம் பணியாற்ற வந்தவர்களுக்குச் சொல்லித் தந்தேன். என் நன்றியை என் முன்னோருக்கு வேறெப்படிக் காண்பிப்பது?

எழுதுவது மட்டுமல்ல. அதன் நுட்பங்களைச் சொல்லித் தருவதும் தொடர்ச்சியானதொரு செயல்பாடே. இங்கே நீங்கள் எதையாவது கற்றால், நீங்கள் செய்ய வேண்டியதும் அதுதான். தகுதியானவர்களுக்குச் சொல்லிக் கொடுங்கள். கொடுக்கக் கொடுக்கக் குறையாது சுரப்பது இது ஒன்றுதான் உலகில்.

O

இந்தப் பகுதியில் எழுத்து சார்ந்து தினம் ஒரு குறிப்பு தரலாம் என்று நினைத்திருக்கிறேன். இவை பாடங்களாக இருக்காது. ஆனால் பாடங்களுக்குள் நுழைவதற்கு உங்களைப் பதப்படுத்தக் கூடும்.

ஒரு சம்பவம். இது நடந்து முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ம.வே. சிவகுமார் என்று அறிமுகமாகி, நண்பரும் ஆகியிருந்த தொடக்க காலம். தாம்பரத்தில் இருந்த அவரது வீட்டுக்கு முதல் முறை என்னை வரச் சொன்னார்.

சிறிய, செடிகள் சூழ்ந்த அழகான தனி வீடு. சுற்று வட்டாரத்தில் நிறைய வெட்ட வெளி தெரிந்த மொட்டை மாடியின் ஒரு ஓரத்தில் அவருக்கென ஓர் அறை இருந்தது. இரண்டு புத்தக அடுக்குகள். ஒரு மேசை, நாற்காலி. சற்றுத் தள்ளி ஒரு ஒற்றைக் கட்டில். மேலே சுழலும் மின் விசிறியின் சத்தம் தவிர வேறு ஒலி இல்லை. அந்த அறையெங்கும் சிகரெட் சாம்பலும் பாதி எழுதிய தாள்களும் காற்றில் அலைபாய்ந்துகொண்டிருக்கக் கண்டேன்.

சிவகுமார், நான் வந்ததைக் கூட கவனிக்காமல் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தார். வீட்டில் இருக்கும்போது அவர் சட்டை போடுவதில்லை. சிறிய பந்து போன்ற தொப்பைக்கு மேல் லுங்கியை இழுத்துச் சொருகியிருந்தார். இடது கைப்பக்கம் ஒரு ஆஷ் டிரே. அது நிரம்பி, கீழெல்லாம் சாம்பலும் சிகரெட் துண்டுகளும் உதிர்ந்திருந்தன.

பெருக்கித் தள்ளிவிட்டு உட்கார்ந்து எழுத மாட்டாரோ என்று நினைத்தேன்.

நெடுநேரம் அவர் என்னைக் கவனிக்கவேயில்லை. வாசலுக்கு முதுகு காட்டியபடி சுவரைப் பார்த்து அமர்ந்து எழுதிக்கொண்டே இருந்தார். தரையில் பரவி அலைபாய்ந்த வெள்ளைத் தாள்களில் குண்டு குண்டான வேப்பம்பழங்கள் போல ஒன்றுடன் ஒன்று ஒட்டாத சொற்கள் நிறைந்திருந்தன. நான் அவரைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏதோ ஓரிடத்தில் சட்டென்று எழுதுவதை நிறுத்தினார். பக்கம் பாதி நிரம்பியிருந்தது. ஒருமுறை படித்துப் பார்த்தார். பிறகு அந்தத் தாளுக்கு வலிக்காமல் அப்படியே எடுத்துக் கீழே போட்டார். மீண்டும் இன்னொரு புதிய தாளை எடுத்து எழுத ஆரம்பித்தார்.

அதில் நான்கு வரிகள் எழுதினார். மீண்டும் படித்துப் பார்த்துவிட்டு, மீண்டும் அதைக் கீழே போட்டார். மறுபடியும் இன்னொரு புதிய தாள்.

இப்போது நான் வந்திருப்பதைத் தெரியப்படுத்தினேன். அவர் கீழே போட்ட தாள்களைக் குனிந்து எடுத்தேன்.

‘வேணாம் விடு. கடைசில மொத்தமா எடுத்துப் போட்டுடலாம்’ என்று சொன்னார்.

‘ஏன் இப்படி எழுதிய தாள்களைக் கீழே போடுகிறீர்கள்?’

‘சரியா வரல. நீயானா என்ன செய்வ? சரியா வராத வரிய அடிச்சிட்டு, பக்கத்துல திரும்ப எழுதுவ. அப்பவும் சரியா வரலன்னா, திரும்பவும் அடிச்சிட்டு எழுதுவ. கடைசி வரைக்கும் சரியா வரலன்னா, பேப்பர கசக்கிக் கீழ போடுவ. அப்டித்தானே?’

‘ஆமா.’

‘எனக்கு அப்படி செய்ய மனசு வர்றதில்ல. எழுதினத குறுக்கால அடிச்சா, ப்ளேடால கீறின மாதிரி வலிக்கும். அதே மாதிரி பேப்பர கசக்கிப் போடுறதும் தப்பு. வயசாயிடுச்சி, இனி நடமாட்டமில்லே, படுத்த படுக்கைதான்னு ஆயிட்டா வீட்டுப் பெரியவங்கள கழுத்த நெறிச்சிக் கொன்னுடுவமா? பேப்பரும் எழுத்தும் நம்மளவிட பெரிசு. அந்த மரியாதைய குடுத்துடணும்.’

O

என் கல்வி இப்படித்தான் தொடங்கியது. அதுதான் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்தது.

5 thoughts on “முதல் பாடம்”

  1. லுத்துஃபுர் ரஹ்மான்

    தண்ணீர் எழுத்து
    சேர்த்துக் கொண்டதற்க்கு நன்றி பாரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *