Skip to content
Home » Blog » கதையைத் தூக்கி வெளியே வை!

கதையைத் தூக்கி வெளியே வை!

பல வருடங்களுக்கு முன்னர், சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரு எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெயர் மறந்துவிட்டது. ஓர் அமெரிக்கப் பெண் எழுத்தாளரை அன்று சென்னை வாழ் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் சந்தித்தோம். அசோகமித்திரன் போன்ற மிகப்பெரிய எழுத்தாளர்களில் இருந்து என்னைப் போன்ற, அந்நாளைய எழுத்துச் சிறுவர்கள் வரை பல்வேறு தரத்திலான எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

அந்தப் பெண்மணி சொற்பொழிவாற்றி முடித்த பிறகு கலந்துரையாடல் தொடங்கியது. நிர்வாகிகளுக்கு அங்கு கூடியிருந்த பெரிய எழுத்தாளர்களைத் தெரிந்திருக்கவில்லை. அல்லது அவர்கள் யார், எவ்வளவு பெரிய சாதனையாளர்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, பொதுவாக அனைவரையும் பார்த்து, ‘இனி நீங்கள் எழுத்து சார்ந்த உங்கள் சந்தேகங்களை அம்மணியிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்’ என்று அறிவித்தார்கள்.

ரஜினி ரசிகர்கள் என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் எப்படியோ, அப்படித்தான் நான் அசோகமித்திரன் விஷயத்தில். தவிர, அந்தப் பெண்மணி அன்று பேசியதை வைத்து அவர் ஒரு அமெரிக்க ரமணி சந்திரன் என்று தெரிந்திருந்தது. யாரை எதிரே வைத்துக்கொண்டு என்ன பேசுகிறோம் என்று யோசித்துப் பேசமாட்டார்களா என்று கோபம் வந்துவிட்டது. என் அருகே அமர்ந்திருந்த யுவன் சந்திரசேகருக்கு அது புரிந்தது. புன்னகை செய்தார். அமைதியாக இரு என்று சைகை செய்தார். ஆனால் அசோகமித்திரன் அதையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

கேள்வி நேரம் தொடங்கியதும் முதலில் அவரிடம்தான் மைக்கை நீட்டினார்கள். அவரும் சிரத்தையாக ஏதோ ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, மைக்கை அடுத்தவரிடம் கொடுத்துவிட்டார். மைக் என்னிடம் வந்தபோது எனக்கு இருந்த நோக்கமெல்லாம் ஒன்றுதான். அந்த அமெரிக்கப் பெண்மணி பதில் சொல்ல முடியாமல் திகைத்துவிட வேண்டும். அல்லது உளற வேண்டும். அந்த வயதில் எனக்கு அப்படிப்பட்ட அடங்காத ஆத்திரங்கள் அவ்வப்போது வரும்.

நான் கேட்டேன்: ‘ஒரு கதைக்குள் இருந்து கதையம்சத்தை எப்படி நீக்குவது?’

அக்காலத்தில் நான் தீவிரமான சா. கந்தசாமி வாசகனாக இருந்ததால் அந்தப் பெண்மணிக்கு இந்த வினாதான் சரி என்று நினைத்தேன். எனக்கு பதில் தெரியும். கந்தசாமியே எனக்கு இதை விளக்கிச் சொல்லித் தந்திருந்தார். அது ஏன் அவசியம் என்று அவர் கருதுகிறார் என்பதையும் அறிவேன். பின்னாளில் நான் அந்த சித்தாந்தத்தை ஏற்க வேண்டாம் என்று முடிவு செய்தது வேறு. அந்த நேரத்தில், அந்தப் பெண்மணியை மடக்க அந்த வினா எனக்குக் கைகொடுத்தது.

நான் கேட்டதும், எதிர்பார்த்ததைப் போலவே அந்தப் பெண்மணி திகைத்துவிட்டார். ‘என்ன? என்ன கேட்டீர்கள்?’ என்று திரும்பவும் கேட்டார். நான் மீண்டும் என் வினாவைச் சொன்னேன். உடனே அவர் அதை விளக்கிச் சொல்லும்படிக் கேட்டுக்கொண்டார்.

எனக்கு அன்று அவ்வளவாக ஆங்கிலத்தில் பேச வராது. பேச வேண்டியதை மனத்துக்குள் நினைத்துக்கொண்டு, அதை மொழியாக்கம் செய்து வைத்துக்கொண்டு பேசுவேன். இது நேரம் எடுக்கும். ஒரு வரி பேசுவதற்குக் குறைந்தது இருபது வினாடிகளாவது ஆகும். எனவே, மிகவும் தடுமாறினேன். ஆயினும் என் கேள்வியை விளக்கி அவருக்குப் புரிய வைத்துவிட்டேன்.

அவர் சொன்னார், ‘எதற்காகக் கதைக்குள் இருந்து கதையம்சத்தை நீக்க வேண்டும்? கதையம்சம் என்ற ஒன்று இல்லாவிட்டால் அது எப்படிக் கதையாகும்? வளமான கற்பனை, நிறைய சம்பவங்கள், அதிரடியான மொழி, திடுக்கிடும் திருப்பங்கள், எதிர்பாராத முடிவு இதெல்லாம்தான் கதை.’

அசோகமித்திரன் தலையைக் குனிந்திருந்தார். அப்போது அவர் சிரித்ததை நான் கண்டுபிடித்துவிட்டேன். மகிழ்ச்சியாக இருந்தது.

‘இல்லை. அவர் கேட்பது உங்களுக்குப் புரியவில்லை’ என்று சொல்லிவிட்டு யுவன் இன்னும் தெளிவாக, ஒழுங்கான ஆங்கிலத்தில் அந்தப் பெண்மணிக்கு விளக்கிச் சொன்னார்.

அந்தப் பெண்மணிக்கு மூக்கெல்லாம் சிவந்துவிட்டது. கோபத்தில் கைகள் நடுங்குவதைக் கண்டேன். ‘நோ! அப்படியெல்லாம் கதை எழுத முடியாது. அப்படி எழுதினால் அது கதையே இல்லை. அடுத்தக் கேள்விக்குப் போய்விடலாம்’ என்று சொல்லிவிட்டார்.

O

இதைப் படிக்கும் உங்களுக்கே அந்தப் பெண்மணி கேட்டது என்ன தவறு என்று தோன்றலாம். உண்மையில் கதையில் இருந்து கதையை நீக்குவது என்பது, தெய்வத்தையும் துறப்பதே துறவின் உச்ச நிலை என்பதைப் போன்றது. உன்னதமான கலைச் சிகரங்கள் என்று கொண்டாடப்படும் பல சிறுகதைகளில் இந்த அம்சத்தைக் காணலாம். தமிழில் அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும், சா. கந்தசாமியின் சாந்தகுமாரி, வண்ணநிலவனின் மிருகம் போன்ற கதைகளைப் படித்துப் பாருங்கள். ‘ஐயோ’ என்று திகைத்துவிடுவீர்கள். ஆனால் எது உங்களை அப்படித் திகைக்க வைத்தது என்று அறிய மாட்டீர்கள். அவையும் கதைதான். ஆனால் மற்றக் கதைகளை வக்கணையாக எடுத்துச் சொல்ல முடிவது போல இந்தக் கதைகளைச் சொல்ல முடியாது.

இந்த, ‘சொல்ல முடியாத’, உணர மட்டுமே முடிகிற அம்சத்தைக் கூட்டுகிறது பாருங்கள், அதில் இருக்கிறது சூட்சுமம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *