கல்கி ராஜேந்திரன், என்னுடைய ஆசிரியர்களுள் ஒருவர். அவரிடம் இருந்து நான் பயின்ற மிக முக்கியமானதொரு பாடம், எதையும் எழுதி வைப்பது.
அவர் ஒரு சூட்கேஸ் வைத்திருப்பார். திறந்து பார்த்தால் அடுக்கடுக்காகக் குறிப்பு எழுதிய தாள்களே இருக்கும். (கல்கி அலுவலக நண்பர்கள் அதைச் சித்திரகுப்தன் பேரேடு என்பார்கள்.) பழைய கேலண்டர் தாள்களின் பின்புறம், நியூஸ் ப்ரிண்ட் வேஸ்ட் இவற்றைத்தான் அவர் குறிப்பெழுதப் பயன்படுத்துவார். அந்தக் குறிப்புத் தாள்களை மிகச் சரியாக 5X7 அளவில் கத்திரித்து அடுக்கி வைத்திருப்பார். ஒவ்வொரு தாளிலும் ஆயிரம் கொசுக்களை அடித்துக் குவித்த மாதிரி மிகவும் பொடிப்பொடியாக எழுதுவார். தாளில் ஒரு இண்டு இடுக்குக் கூட வீணாகாது. என்ன எழுதினாலும் ஒரு வரிதான். தவறாமல் அதற்கு நம்பர் போட்டிருப்பார். தேதி குறிப்பிட்டிருப்பார். அப்படி என்னதான் அவர் பக்கம் பக்கமாக எழுதிச் சேகரிக்கிறார் என்று மொத்தமாகப் படித்துப் பார்க்க வேண்டும் என்று எனக்கு அந்நாளில் ஆர்வம் இருந்தது. ஆனால் காட்ட மாட்டார். நம்மோடு பேசிக்கொண்டே ஏதோ எழுதுவார். உடனே அதை சூட்கேஸில் வைத்துப் பூட்டிவிடுவார்.
முதல் முறை அவரை நுங்கம்பாக்கத்தில் இருந்த அவர் வீட்டில் சென்று சந்தித்தேன்.
‘நல்லா எழுதறிங்க. கல்கிக்கு வேலைக்கு வந்துடுங்களேன்?’
சுற்றி வளைப்பெல்லாம் இல்லை. நலம் விசாரிப்புகூட இருந்ததா என்று நினைவில்லை. நான்தான் பா. ராகவன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டதும் உடனே வந்த சொல் அது.
அப்போது நான் தாய் வார இதழில் ஃப்ரீ லான்ஸராக எழுதிக்கொண்டிருந்தேன். பக்கத்துக்கு முப்பது ரூபாய் தருவார்கள். ஒவ்வொரு இதழிலும் பத்துப் பக்கங்களாவது நிச்சயம் எழுதிவிடுவேன். கதை எழுதினால் அதற்குக் காசு தனி. அப்போது எழுதிய கதை ஒன்றைக் கல்கிக்கு அனுப்பிப் பார்க்கலாம் என்று அனுப்பியபோதுதான் இந்த அழைப்பு வந்தது.
‘சரி சார்’ என்று சொன்னேன்.
‘எப்ப வரிங்க?’
‘ஒரு வாரம் குடுங்க சார்.’
உடனே கேலண்டரைப் பார்த்தார். ‘இன்னிலேருந்து ஒரு வாரமா? சரி. அப்ப டிசம்பர் 6ம் தேதி வந்து சேந்துடுங்க. அன்னிக்கு ஞாயித்துக்கிழமை. ஆபீஸ் கிடையாது. ஆனா நீங்க வந்துடுங்க. நான் இருப்பேன்.’
நான் கேட்ட ஒரு வார அவகாசம் ஒரு ஞாயிறில் முடிகிறது என்றால், அன்றைக்கு விடுமுறை நாள் என்றாலும் பரவாயில்லை என்று எவ்வளவு பேர் நினைப்பார்கள்? ஆனால் அவர் அப்படித்தான் நினைப்பார். ஒவ்வொரு சொல்லும் அவருக்கு முக்கியம்.
‘சரி சார். டிசம்பர் 6 வந்திடுறேன்’ என்று சொல்லிவிட்டு விடை பெற்றேன். அவர் உடனே சூட்கேஸைத் திறந்து ஒரு தாளில் (ஏற்கெனவே அதில் முக்கால்வாசி நிரம்பியிருந்தது.) விறுவிறுவென ஏதோ எழுதினார். உள்ளே வைத்து மூடிவிட்டு, ‘போயிட்டு வாங்க’ என்று சொன்னார்.
டிசம்பர் 6, 1992 அன்று நான் கல்கியில் பணியில் சேர்ந்தேன். அலுவலகத்தில் யாரும் இல்லை. எனக்காக அவர் மட்டும் கிளம்பி வந்திருந்தார். ஓர் இருக்கையில் என்னை அமர வைத்துவிட்டு ஒரு கட்டுக் கதைகளை எடுத்து எதிரே வைத்தார். ‘இன்னிக்கு ஒண்ணும் பெரிசா வேல இல்ல. சும்மா இத படிச்சிட்டிருங்க. அர அவர் கழிச்சி மாடிக்கு வாங்க’ என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அரை மணி நேரத்துக்குப் பிறகு நான் இரண்டாம் தளத்தில் இருந்த அவரது அறைக்குச் சென்றேன். அப்போதுதான் என்னைக் குறித்து முழுதும் விசாரித்து அறிந்தார். பத்திரிகைப் பணியின் கஷ்டங்கள், சவால்கள், சந்தோஷங்களைப் பற்றிச் சொன்னார். நான் என்னென்ன கற்க வேண்டும், பேட்டிகளுக்குச் செல்லும்போது எப்படிப் பேச வேண்டும், கட்டுரைகளைத் திருத்தும்போது எவற்றையெல்லாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும் என்று விளக்கினார்.
‘உங்க கதை படிச்சேன். மொழி சுத்தமாத்தான் இருக்கு. ஒற்றெல்லாம் கரெக்டா போட்டுடறிங்க’ என்று சொன்னார்.
‘எனக்கு இலக்கணம் தெரியும் சார்.’
‘தெரிஞ்சிருந்தா ரொம்ப நல்லது. இனிமே இது உங்க பத்திரிகை. என்ன வேணா எழுதுங்க. என்ன எழுதினாலும் சனங்களுக்குப் புரியணும். அது ரொம்ப முக்கியம்.’
பிறகு சம்பள விஷயங்கள். பேசி முடித்த பிறகு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினேன். உடனே அவர் சூட்கேஸைத் திறந்து ஒரு தாளை எடுத்தார். எழுதிய ஒரு வரிக்கு எதிரே டிக் மார்க் போட்டார்.
‘அதுல அப்படி என்ன சார் எழுதறிங்க?’ என்று அப்போதே கேட்டுவிட்டேன்.
‘அது ஒண்ணுமில்லிங்க. போன வாரம் உங்கள வரச் சொல்லியிருந்தத மார்க் பண்ணி வெச்சிருந்தேன். இந்தா பாருங்க. நீங்க அன்னிக்கி வந்து பாத்துட்டுப் போனதும், ஆறாந்தேதி ஜாயின் பண்றேன்னு சொன்னிங்கல்ல? அத எழுதி வெச்சேன். தோ, இப்ப ஜாயின் பண்ணிட்டிங்க. அதனால, முடிஞ்சிதுன்னு டிக் பண்ணிட்டேன். இனிமே இத மறந்துட்டு அடுத்தத கவனிக்கலாம் பாருங்க.’
இம்மாதிரியான குறிப்புகள் மட்டுமல்ல. எடிட்டோரியல் உரையாடல்களின்போது ஒவ்வொருவரும் சொல்லும் கருத்துகளை அவர் எழுதி வைப்பார். அவர் என்ன சொன்னார் என்பதையும் குறிப்பார். முடிவு எடுத்த விஷயங்கள், எடுக்க வேண்டிய விஷயங்கள், இழுத்தடிக்கும் சங்கதிகள், வெளியான கட்டுரைகள், கதைகளைக் குறித்த குறிப்புகள், விமரிசனங்கள் ஏதாவது வந்தால் அது பற்றிய விவரங்கள், படித்த புத்தகங்கள், படிக்க நினைத்திருப்பவை, படிக்கும்போது கவனம் கவரும் வரிகள் – எதுவும் மிச்சமில்லை.
ஒரு மனிதன் தனது வாழ்நாளில் நிகழும் ஒவ்வொன்றையும் ஒற்றை வரியில் எழுதி வைப்பது என்பது எளிய செயல் அல்ல. அந்தப் பழக்கம் அவருக்கு யாரிடமிருந்து எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது. அதில் இரண்டு லாபங்கள் உள்ளதைப் பிறகு யோசித்து அறிந்தேன். முதலாவது, எதுவும் மறக்காது; தவறிப் போகாது. இரண்டாவது, எதையும் ஒரு வரியில் சுருக்கிவிட முடியுமென்றால் நாம் மொழி விற்பன்னர் ஆகிவிட்டோம் என்று பொருள்.
இடைவிடாத பயிற்சியின் மூலமாக மட்டுமே இதை நடைமுறைக்குக் கொண்டு வர முடியும். ஆனால் இந்தப் பழக்கம் தரும் பலன் அளப்பரியது.
என் ஆசிரியரிடம் இருந்து நான் கற்ற விலை மதிப்பில்லாத பழக்கம், இந்தக் குறிப்பெழுதுவது. முன்பெல்லாம் நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைப்பேன். பிறகு, கிடைக்கும் எதிலும் எழுதுவேன். 2000ம் ஆண்டு கம்ப்யூட்டரில் எழுத ஆரம்பித்த பிறகு குறிப்புகளுக்காகவே மாதவாரியாக நோட்பேட் வைத்திருந்தேன். ஆப்பிள் போன் அறிமுகமான பின்பு எனக்குக் குறிப்பெழுதுவது மிகவும் வசதியாகிவிட்டது. அதில் உள்ள Notes app-இல் என்ன தோன்றினாலும், எந்த இடத்தில், எந்நேரத்தில் தோன்றினாலும் உடனே ஒரு வரி எழுதிவிடுவேன்.
கதைகளுக்கான யோசனைகள், கட்டுரைகளுக்கான குறிப்புகள், படித்த விஷயங்கள், ட்விட்களுக்கான ஐடியாக்கள், கவிதைக் கிறுக்கல்கள், கடைக்குச் சென்றால் வாங்க வேண்டிய பொருள்கள், யாரையாவது சந்திப்பதாகச் சொல்லியிருந்தால் அந்த விவரங்கள், அனைத்தும்.
எழுதுபவனுக்கு இந்தக் குறிப்புகள் மிகவும் முக்கியம். எது எப்போது உதவும் என்று தெரியாது. இங்கே தரப்பட்டிருக்கும் புகைப்படத்தைப் பாருங்கள். எந்த வருடம் இதனை எழுதினேன் என்று நினைவில்லை. அதைக் குறிக்க விட்டிருக்கிறேன். ஆனால் எழுதப்பட்டுள்ள விஷயத்தைக் கவனியுங்கள்.
இந்த நான்கு வரிக் குறிப்புதான் பின்னாளில் ‘இறவான்’ நாவலாக உரு மாறியது.
மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி சார்.
பொக்கிஷமாக போற்றப்பட வேண்டிய தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
தங்களின் எதிலும் உன்னதம் புத்தகத்தில் வாசித்து இருந்தாலும்கூட, இறவான் பிறந்த வரலாறு சுவாரஸ்யம்… ரா கி அவர்களின் பல்லக்கு பிறந்த விதத்தை நினைவூட்டுகிறது… புதியதாக எழுத நினைப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேன்டிய பாலபாடம்…
அருமை.நோட்பேடில் எழுதி வைக்கும் வழக்கம் எனக்கு உண்டு.தேதி,நேரம் வரிசையில் ஏன் குரல் பதிவு கூட உண்டு.
பயண நேரம் , காத்திருப்பு நேரங்களில் நோட் பேட்டை திறந்து பார்ப்பேன் சலிப்பு மனநிலையை மாற்றிவிடும் வகையில் மிகவும் உதவியாக இருக்கும்.