Skip to content
Home » Blog » வாயைத் திறந்து படி

வாயைத் திறந்து படி

யாரையும் வெறுப்படையச் செய்வதற்காக யாரும் எழுதுவதில்லை. ஆனால் சிலருடைய எழுத்தைப் படிக்கவே முடியவில்லை; எரிச்சல் வருகிறது; எடுத்தவுடன் வைத்துவிடத் தோன்றுகிறது என்ற விமரிசனங்களை அவ்வப்போது பார்க்கிறோம்.

நம்மிடம் எழுதுவதற்கு விஷயம் இருக்கும். நிறையவே இருக்கும். ஊக்கமுடன் அமர்ந்து எழுதுவோம். எழுதியதை கவனமாகப் படித்துப் பார்த்துத் திருத்தங்கள் செய்வோம். மெருகேற்றுவோம். எல்லா அலங்காரங்களையும் செய்து முடித்த பிறகுதான் வெளியிடுவோம். இருப்பினும் சில சமயம் சரியான வரவேற்பு இல்லாமல் போகும். உடனே வாசகன் இறந்துவிட்டான்; படைப்பு அநாதையாகக் கிடக்கிறது என்று புலம்பத் தொடங்கிவிடுவோம்.

உண்மையில் இந்த வாசக நிராகரிப்பு என்பது பெரும்பாலும் எழுதப்படும் விஷயத்துக்காக நேர்வதல்ல. எழுதும் முறையினால் நேர்வதுதான். வெறுக்கத்தக்க சங்கதிகளைக் கூட ரசித்துப் படிக்கும் விதத்தில் எழுதிவிட முடியும்.

நெடுநாளாக இதனைக் கூர்ந்து கவனித்து வருகிறேன். நமக்கே தெரியாமல் செய்யும் சில எளிய பிழைகளும் நம்மையறியாமல் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும் சில சொற்களும் பிரயோகங்களும் வாசகர்களிடையே ‘இதைப் படிக்காவிட்டால் நஷ்டமில்லை’ என்ற அபிப்பிராயத்தை உருவாக்குகின்றன. ஏனெனில், அவை பெரும்பான்மை மக்களின் மொழி வங்கிச் சேமிப்பில் இருப்பதில்லை.

இதனால், வாசகர்கள் அனைவரும் இலக்கணப் புலிகளா, மொழி விற்பன்னர்களா என்றால் கிடையாது. அவர்கள் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் மனித மன அமைப்பு சிலவற்றை எளிதாக ஏற்கும்; சிலவற்றை அங்கீகரிக்க மறுக்கும். இது உணர்ந்து செய்யப்படுவதல்ல. தன்னிச்சையாக வருவது. இதையெல்லாமும் கணக்கில் கொண்டுதான் நமது மொழி இலக்கணங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு காலத்துக்குப் பிறகு இலக்கணம் கற்று எழுதுவதெல்லாம் எப்படி முடியும் என்று கேட்டால், கஷ்டம்தான். ஆனால் எழுதுவதற்கு முன்னால் ஒவ்வொரு சொல்லையும் வாய்விட்டு ஒருமுறை சொல்லிப் பார்க்க முடியுமல்லவா? ஒன்றைத் தெரிந்துகொள்ளுங்கள். தமிழின் அழகே, அதன் இலக்கணங்கள் யாவும் உச்சரிப்பு சார்ந்து வகுக்கப்பட்டிருப்பதுதான்.

எதையும் வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள். உச்சரிப்பு உங்களுக்கே இடறாதிருந்தால் மட்டும் எழுத்தில் கொண்டு வாருங்கள். அது இலக்கண மீறலாக இருந்தாலும் தவறில்லை.

இரும்பு குதிரைகள் என்று பாலகுமாரன் தனது நாவலுக்குத் தலைப்பு வைத்தபோது, இலக்கணப்படி அது இரும்புக் குதிரைகள் அல்லவா என்று கேட்டார்கள்.

‘ஆமாம். ஆனால் அச்சொல்லைக் காதில் போட்டுத் தட்டிப் பார்த்தபோது குதிரைப் பாய்ச்சல் நிகழவில்லை. அதனால் க்-ஐத் தவிர்த்தேன்’ என்று அவர் சொன்னார்.

தவறே இல்லை. இலக்கணம் முக்கியம்தான். ஆனால் அதை முற்றிலும் அறிந்தால் மட்டுமே மீற முடியும். இதனால்தான் இலக்கணம் படிக்காதவர்கள் தவறு செய்யும்போது அது விகாரமாகத் துருத்திக்கொண்டு தெரிந்துவிடுகிறது. எளிய ஒற்றுப் பிரச்னைகள், சந்திப் பிரச்னைகளைத் தவிர்த்தாலே வாசகனை எளிதாக நம் எழுத்துக்குள் இழுத்து வந்துவிட முடியும்.

ஓர் எழுத்தாளரை வெறுக்கும் அளவுக்கு வாசக மனம் விலகிப் போவதற்கு இன்னொரு முக்கியமான காரணம், சொல்ல வேண்டிய விஷயத்தைத் தெளிவாகச் சொல்லாதிருப்பது. ஒரு சொற்றொடரை உருவாக்கிய உடனேயே வாய்விட்டு ஒருமுறை சொல்லிப் பார்த்தால் இந்தப் பிழையைத் தவிர்த்து விட முடியும். ஓர் உதாரணம் பாருங்கள்.

//சுமார் முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு, யூதர்கள் ஸ்பெயினிலிருந்து வெளியேற்றப்பட்டபோது, தாங்கள் யூதர்கள் என்றுகூடச் சொல்லிக்கொள்ள முடியாத யூதர்களும் வெளியேற்றப்பட்டபோது, துனியாவின் பிள்ளைகளது பிள்ளைகள் கடிஸ் மற்றும் பலோஸ் தெ மோகுவெவிலிருந்து கப்பல்களில் ஏறினர்.//

இது ஒரு மொழிபெயர்ப்பு நாவலில் வருகிற சொற்றொடர். படிக்க சிரமமாக உள்ளது அல்லவா? இதனை எழுதிய பிறகு மொழிபெயர்ப்பாளர் ஒருமுறை வாய்விட்டுப் படித்துப் பார்த்திருந்தார் என்றால் அதனை இவ்வாறு மாற்றியிருப்பார்:

//சுமார் முன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னர் யூதர்கள் ஸ்பெயினில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுக்குத் தங்களை யூதர்கள் என்று வெளியே சொல்லிக்கொள்ளக்கூட முடியாத சூழ்நிலை. துனியாவின் பேரப் பிள்ளைகள் கடிஸ் மற்றும் பலோஸ் தெ மோகுவெவில் இருந்து கப்பல் ஏறினர்.//

மொழிபெயர்ப்புகளில் மட்டுமல்ல. நேரடித் தமிழ் எழுத்திலும் இத்தகைய மொழி சார்ந்த குழப்பங்கள் அதிகம் வருகின்றன. இலக்கணம் அறியாத எழுத்தாளர்கள் வாசக வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ளாதிருக்க ஒரே வழி, என்ன எழுதினாலும் அதை வாய்விட்டு ஒருமுறை படித்துப் பார்ப்பதுதான். மனத்துக்குள் படித்துப் பார்ப்பதெல்லாம் உதவாது. உரக்கப் படிக்க வேண்டும். அப்போதுதான் உள்வாங்கச் சிரமமாக உள்ள இடங்கள் எவை என்பது நமக்கே விளங்கும்.

முப்பது வருடங்களுக்கு முன்னர், என் மதிப்புக்குரிய பத்திரிகையாளர் ஜ.ரா. சுந்தரேசன் இதனை எனக்குச் சொல்லித் தந்தார். ஒவ்வொரு வரியையும் எழுதி முடித்ததும் வாய் விட்டு ஒரு முறை படி. அது உச்சரிக்க சுலபமாக இல்லாவிட்டால் அடுத்த வரிக்கு நகராதே.

இன்றுவரை இதனைக் கடைப்பிடிக்கிறேன்.

5 thoughts on “வாயைத் திறந்து படி”

  1. சிறப்பான தகவல். இதை நான் கட்டுரைகள் எழுதும்போது கடைபிடித்து வருகிறேன். நீங்கள் பகிர்ந்த இந்த தகவல் நான் சரியான பாதையில் பயணித்து வருகிறேன் என்பதை உணர்த்துகிறது. நன்றி சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *