நிறையப் படிக்கிறோம். நிறையப் பேரைப் படிக்கிறோம். சிலரைப் பிடிக்கிறது. சிலவற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கிறோம். இதெல்லாம் எல்லோரும் செய்வது. ஆனால் எழுதும் விருப்பம் உள்ளவர்கள், நாம் ஏன் ஒரு புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கிறோம் என்று யோசிக்க வேண்டும்.
1. அதன் கதை அல்லது கருப் பொருள் நமக்குப் பிடிக்கிறது
2. எழுதிய விதம் கவர்கிறது
3. நாம் எண்ணிப் பார்க்காத அர்த்தங்களை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அப்படைப்பு தருகிறது
4. காரணமே இல்லாமல் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அது நமக்கானது என்னும் எண்ணம் வருகிறது
5. இதுதான் உயரம்; இந்த உயரத்தை நம் எழுத்தில் நாம் தொடவேண்டும் என்று அடி மனம் விரும்புகிறது
யோசித்தால் இப்படிச் சில காரணங்கள் தோன்றும். பிடித்த பலவற்றுள் அதிக முறை திரும்ப எடுத்து படித்துப் பார்த்த புத்தகம் எது என்று பாருங்கள். பொன்னியின் செல்வனாக இருக்கலாம். முத்து காமிக்ஸாக இருக்கலாம். ஜீரோ டிகிரியாக இருக்கலாம். விஷ்ணுபுரமாக இருக்கலாம். சுஜாதா, பாலகுமாரன், பி.டி. சாமி, ரமணி சந்திரன், கிருபானந்த வாரியார், இறையன்பு, அப்துல் கலாம் என்று யார் எழுதியதாகவும் இருக்கலாம்.
1. அது இலக்கியத் தரமானதாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை
2. அதை உலகமே கொண்டாடி இருக்க வேண்டுமென்று அவசியமில்லை
3. அது ஒரு குப்பை என்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கலாம்
4. சீ, இதையா விழுந்து விழுந்து படிக்கிறாய் என்று உங்களையே பலபேர் சொல்லியிருக்கலாம்
5. இதைப் போய் நாம் ஏன் திரும்பத் திரும்பப் படிக்கிறோம் என்று நீங்களேகூட நினைத்திருக்கலாம்
எப்படி ஆனாலும் உங்கள் மனம் ஓயாமல் விரும்பும் ஒரு புத்தகம் நிச்சயமாக இருந்தே தீரும் – நீங்கள் எழுத்தாளராக இருந்தால்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் என்ன எழுத அமர்ந்தாலும், ஆரம்பிப்பதற்கு முன்னால் அந்த உங்களுடைய பிரத்தியேகமான விருப்பத்துக்குரிய புத்தகத்தை எடுத்து ஒரு பத்துப் பக்கங்கள் படித்துவிட்டு எழுத ஆரம்பியுங்கள். இது ஒரு மனப் பயிற்சி. இதனால் என்ன லாபம் என்றால், நீங்கள் எழுத நினைக்கும் விஷயம் சரியான அலை வரிசையில் சொற்களாக உருமாற்றம் அடையும். நீங்கள் எழுத நினைக்கும் கருப் பொருளுக்குப் பொருந்தாத சுருதி குறுக்கிடாது. உங்களை அறியாமல் எழுத்தின் மீது மனம் குவியும். கவனம் சிதறாது. எந்த அம்சம் உங்களை அந்தப் பிரத்தியேகப் புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படிக்க வைக்கிறதோ, அது, வேறு உருவில் நீங்கள் எழுதுவதில் தன்னியல்பாகக் கூடி வரும்.
இதனால் அந்தக் குறிப்பிட்ட புத்தகம் / எழுத்தாளரின் பாதிப்பு நம் எழுத்தில் வந்துவிடும் என்ற அச்சம் தேவையில்லை. அப்படி ஒன்று நிகழாது. எழுத்துத் திறமை அறவே இல்லாதவர்கள்தான் நகலெடுக்க முனைவார்கள். உங்கள் எழுத்து நகல் என்று உங்களுக்கே தோன்றுமானால் நீங்கள் எழுத்தாளர் இல்லை என்று நீங்களே முடிவு செய்துகொண்டு விடலாம். எழுதுவதை விட்டுவிட்டு வேறு வேலை பார்க்கலாம். ஆனால், தொண்ணூற்றொன்பது சதவீதம் அப்படி நேராது. உங்களுடைய இயல்பான படைப்பு மனத்தை உங்களுக்குப் பிடித்த ஒரு புத்தகம் மேலும் கூர் தீட்டித் தூண்டி விடவே செய்யும்.
நான் எழுதத் தொடங்கிய காலம் முதல் இன்றைக்கு இந்தக் குறிப்பை எழுதும் கணம் வரை, என்ன எழுதினாலும் அதற்கு முன் ஒரு பக்கமாவது அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலில் இருந்து எதையாவது படிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். அந்த நாவலின் முதல் சொல்லில் இருந்து இறுதிச் சொல்வரை எனக்கு மனப்பாடமாகத் தெரியும். எவ்வளவு முறை படித்திருப்பேன் என்பதற்குக் கணக்கே இல்லை. இருப்பினும் திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டே இருக்கிறேன்.
அசோகமித்திரனின் ஆகச் சிறந்த படைப்பு அதுதானா என்று கேட்பீர்களானால், என் பதில் – இல்லை. ஒற்றனைக் காட்டிலும் சிறந்த நாவல்களை அவர் எழுதியிருக்கிறார். நாவல்களைக் காட்டிலும் பல மகத்தான சிறுகதைகளுக்காக, குறுநாவல்களுக்காக அவரை நான் என்றும் விரும்புவேன். அது வேறு விஷயம். ஆனால், நான் எழுத உட்காரும்போது எனக்கான ஊட்டச் சத்தை நான் ஒற்றனில் இருந்தே பெறுகிறேன். அதில் வருகிற ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் என்னைப் பார்க்க முடிகிறது என்பதுதான் முக்கியமான காரணம்.
உட்கார்ந்து பொறுமையாக யோசித்துப் பாருங்கள். இறக்கும் வரை நீங்கள் நேசிக்கக்கூடிய ஒரே ஒரு புத்தகம் என்றால் அது எதுவாக இருக்கும்? அதுதான் உங்களது பிரத்தியேக ரகசியப் புத்தகம். நீங்கள் என்ன எழுத அமர்ந்தாலும் எழுதத் தொடங்கும் முன் அந்தப் புத்தகத்தில் இருந்து சிறிது படியுங்கள்.
அதுதான் உங்கள் எழுத்தின் தாய்ப்பால்.
அப்படி ஒன்றை சுஜாதா எழுத்துக்களில் இருப்பதாக உணர்கிறேன்.ஆனால் குறிப்பிட்ட ஒரு புத்தகம் என்று இதுவரை சுருக்கியதில்லை.தேடுகிறேன்.நன்றி.
இந்த மாதிரி ஒரு புத்தகத்தை தேர்ந்தெடுத்து வைக்கவே தனியாக பழக வேண்டும்.
எஸ். ராமகிருஷ்ணனின் ‘தேசாந்திரி’ என்னை அதிகமாய் வசீகரித்த நூல். நீங்கள் குறிப்பிட்டதுபோல அதை என்னையறியாமல் பலமுறை வாசித்திருக்கிறேன்.