Skip to content
Home » Blog » ஒரு கடிதம், பல பாடங்கள்

ஒரு கடிதம், பல பாடங்கள்

குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்கள் இறந்தபோது ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் மூவரும் தமது ஆசிரியரைப் பற்றிய நினைவுகளைத் தனித்தனியே எழுதினார்கள். பிறகு அது தொகுக்கப்பட்டு எடிட்டர் எஸ்.ஏ.பி என்ற தலைப்பில் வானதி பதிப்பகம் மூலமாகப் புத்தகமாக வெளி வந்தது. எவ்வளவு பேர் அந்தப் புத்தகத்தைப் படித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அஞ்சலிக் கட்டுரை என்பது இன்றைக்கு ஒரு சடங்கு போலாகிவிட்ட சூழ்நிலையில், எழுத்து-பத்திரிகை இயல் சார்ந்த ஆர்வம் உள்ளவர்களுக்கு சிறிது சிறிதாக நூற்றுக் கணக்கான பாடங்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் புத்தகம் அது.

அதில் ஒரு கட்டுரை, ஜ.ரா. சுந்தரேசன் எழுதியது. (தினமணி கதிரில் முதலில் வெளிவந்தது.) அவர் குறிப்பிட்டிருக்கும் சம்பவத்தின் பின்னணி இது:

எடிட்டர் எஸ்.ஏ.பி, சுந்தரேசனிடம் மாலைமதிக்கு ஒரு நாவல் எழுதச் சொல்கிறார். சுந்தரேசன் முதல் நான்கு அத்தியாயங்களை எழுதி ஆசிரியருக்கு அனுப்புகிறார். அதைப் படித்துப் பார்க்கும் ஆசிரியருக்கு அதில் நிறைய பிரச்னைகள் இருப்பது போலத் தோன்றுகிறது. ஆனால் கதை நன்றாக இல்லை என்று நேரடியாகச் சொல்லி, திருப்பித் தந்து தனது உதவி ஆசிரியரை சோர்வடைய வைக்க அவர் விரும்பவில்லை.

எனவே, ஒரு கடிதம் எழுதுகிறார். கதையில் பாராட்டக்கூடிய, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றிரண்டு விஷயங்களை முதலில் குறிப்பிட்டுவிட்டு, பிறகு மெல்ல பிரச்னைக்குரிய இடத்துக்கு வருகிறார்.

ஒரு கதை ஏன் நன்றாக இல்லாதது போலத் தோன்றுகிறது?

எந்த அம்சம் ஒரு கதையில் விடுபடுவதால் அது மனத்தைத் தொடுவதில்லை?

எழுதுபவன், எழுதும்போது எவ்விதமான மனநிலை-பொறுப்பைச் சுமக்க வேண்டும்?

இவை மிக மிக முக்கியமான விஷயங்கள். கதை எழுதுவதில் ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் ஜ.ரா. சுந்தரேசனுக்கு எடிட்டர் எஸ்.ஏ.பி. எழுதிய இந்தக் கடிதம் வைர சூத்திரம் போன்றது.

அந்தக் கடிதத்தை கீழே இணைப்பில் தந்திருக்கிறேன். கவனமாகப் படித்துப் பாருங்கள். ஓர் எழுத்தாளருக்குத் தேவையானவை மட்டுமல்ல. ஒரு எடிட்டருக்குத் தேவையான தகுதிகளையும் சேர்த்து அறிந்துகொள்ள முடியும்.

பிகு:- என்னிடம் உள்ளது மிகவும் புராதனமான பிரதி. கூகுள் டிரைவில் ஏற்றி, வேர்ட் கோப்பாக மாற்ற முயற்சி செய்து பார்த்தேன். ஆனால் அச்சுருவில் உள்ளதன் வேர்ட் பிரதி சரியாக வரவில்லை. வேறு வழியின்றி இதனை அப்படியே படம் எடுத்து, பிடிஎஃப் ஆக்கித் தருகிறேன்.

எடிட்டர் எஸ்.ஏ.பி. புத்தகத்தை எங்கிருந்தேனும் வாங்கி முழுதாகப் படித்தீர்கள் என்றால் இம்மாதிரி ஏராளமான பாடங்கள் கிடைக்கும்.

ஜ.ரா. சுந்தரேசனுக்கு எடிட்டர் எஸ்.ஏ.பி. எழுதிய கடிதத்தை இங்கே வாசிக்கலாம். 

3 thoughts on “ஒரு கடிதம், பல பாடங்கள்”

  1. முக்கியமான பார்வை.
    ஒரு கவனமற்ற எழுத்தை அதற்கு நேர் மாறாக அத்தனை அக்கறையுடன் எழுதுவது மிகச்சிறந்த பண்பு. எஸ்.ஏ.பி அவர்கள் சுட்டிக்காட்டிய திருத்தங்களை விட அவருடைய ஆழமான ஞானமும் அந்த மேம்பட்ட நிலையிலும் தவறாக எழுத்தை அணுகியவரை கருணையோடு விளக்கிய பண்பும் எங்குமே காணக்கிடைக்காதது.

  2. புதிய பாடம். என்னைப் போன்ற புதியவர்களுக்கு இது கைகூட நேரம் பிடிக்கும். முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *