மேற்கண்ட குறிப்பினை ஃபேஸ்புக்கில் நண்பர் சரவண கார்த்திகேயன் எழுதியிருந்தார். ஆனால் இது ஒரு சாதனையோ, திறமையோ, பெருமையோ அல்ல. எளிய மனப் பயிற்சிகளின் மூலம் யாரும் செய்யக்கூடியதுதான்.
2000ம் ஆண்டு நான் குமுதத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அப்போது ப்ரியா கல்யாணராமன் அங்கே எனக்கு அறிமுகமானார். எடிட்டோரியலில் அப்போது இருந்தவர்களிலேயே சீனியர் அவர்தான். அதாவது அவர் ஒரு குமுதம் ஆதிவாசி. எஸ்.ஏ.பி காலம் தொடங்கி, ராகி ரங்கராஜன், சுந்தரேசன், புனிதன் போன்றவர்களைக் கண்டு, அதன் பிறகும் குமுதத்துக்கு வந்து போன ஏராளமானவர்களைப் பார்த்தவர் – என்னையும் சேர்த்தேதான்.
அது இருக்கட்டும். குமுதம் அப்போது பல புதிய பத்திரிகைகளை அடுத்தடுத்துக் கொண்டு வரும் முயற்சியில் இருந்தது. பெண்களுக்கு ஒன்று, ஆன்மிகத்துக்கு ஒன்று, மருத்துவத்துக்கு ஒன்று, இலக்கியத்துக்கு ஒன்று, இடைநிலை இதழ் ஒன்று, அரசியலுக்கு ஒன்று, சோதிடத்துக்கு ஒன்று – தினசரி செய்தித்தாள் மட்டும்தான் மிச்சம்.
நான் அப்போது ஆரம்பிக்கப்பட்ட ஜங்ஷன் என்ற இதழுக்கு ஆசிரியர். பிரகாஷ் (ப்ரியா கல்யாணராமனை அப்படித்தான் அழைப்போம்) குமுதத்துக்கும் ஆசிரியர், குமுதம் பக்திக்கும் ஆசிரியர். இந்த இரு பெரும் பொறுப்புகள் தவிர அவர் அப்போது புதிதாகத் தொடங்கப்பட்ட பெரும்பாலான இதழ்களில் தலா ஒரு தொடர் எழுதிக்கொண்டிருந்தார். என் நினைவு சரியென்றால், ஒரே சமயத்தில் ஐந்து தொடர்கள்.
வேறு எழுத்தாளர்களே இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறார்கள்தாம். ஆனால் ஒரு புதிய பத்திரிகையைத் தூக்கி நிறுத்தும் எழுத்து என்பது முற்றிலும் வேறு. விளையாட்டே அல்ல. நூறு சத கவனம் குவிய வேண்டும். எழுதும் ஒவ்வொரு வரியும் ருசிக்க வேண்டும். மீண்டும் எப்போது படிப்போம் என ஏங்கச் செய்யும்படியாக இருக்க வேண்டும். அனைத்திலும் முக்கியம், அந்தந்தப் பத்திரிகையின் தன்மை, குணம், வாசகர்களின் வயது-சமூக நிலை குறித்த தெளிவான தகவல்களை அறிந்து இருக்க வேண்டும். யாருக்கு எழுதுகிறோம் என்ற தெளிவு இல்லாவிட்டால் என்ன எழுதினாலும் பயனற்றுப் போய்விடும்.
பிரகாஷ் அந்த சூட்சுமம் அறிந்த எழுத்தாளர். அவர் ‘ஜாக்கிரதை, வயது 16’ என்று தொடர்கதை எழுதினால், அதைப் படிக்கும் வாசகர்கள் என்னென்ன விரும்புவார்களோ அதெல்லாம் அக்கதையில் இருக்கும். அக்கதைக்கேற்ற மொழி கூடி வரும். அந்த வயதுக்குரிய துள்ளலும் துடிப்பும் இருக்கும். இளமை, காதல், கவர்ச்சி என எல்லாமே சம அளவில் சேரும்.
அதே மனிதர் ‘ஜகத்குரு’ என்று ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாறை ஜங்ஷனில் எழுதுகிறார் என்றால், நீங்கள் குமுதத்தில் படித்த ப்ரியா கல்யாணராமனை அதில் பார்க்க முடியாது. நானறிந்து, கண்ணீர் வரச் செய்யும் பக்தி எழுத்து என்பது தமிழில் அவரிடம் மட்டும்தான் உண்டு. பரணீதரன் எழுதுவார். அவருக்கு முன்னால் ரா. கணபதி எவ்வளவோ எழுதியிருக்கிறார். இன்னும் பலர் இருக்கிறார்கள். எல்லோரும் பரவசப்படுத்துவார்கள். அதில் சந்தேகமில்லை. ஆனால் யார் எழுத்தும் கண்ணீர் வரவழைக்காது. பிரகாஷால் அது முடியும்.
அவர் பெண்கள் பத்திரிகையில் தொடர் எழுதினால், எந்தப் பெண் எழுத்தாளரும் அவர் முன் தோற்று ஓடத்தான் வேண்டும். சிறுகதையோ, தொடர்கதையோ, கட்டுரையோ, கட்டுரைத் தொடரோ – வடிவம் எதுவாக இருந்தாலும் சரி. பத்திரிகை எதுவாக இருந்தாலும் சரி. பிரகாஷால் ஒரே சமயத்தில் எழுத்தில் நூறு பிறப்பு எடுக்க முடியும். நான் சொல்வது மிகையே அல்ல. நான் சந்தித்த மிகச் சில அபூர்வங்களுள் அவர் ஒருவர்.
அவரால் எப்படி ஒரே நேரத்தில் இவ்வளவு தொடர்களை வேறு வேறு பத்திரிகைகளின் தன்மைக்கேற்ப, வேறு வேறு மொழி நடையில் எழுத முடிகிறது என்று கேட்டேன். அன்று அவர் சொன்ன பதில் இப்போதும் நினைவிருக்கிறது.
‘அதெல்லாம் எழுதிடலாம் சார். ஒரு நாளைக்கு ஒண்ணுதானே எழுதறேன்? ஒண்ணு எழுதறப்ப இன்னொண்ண நினைக்க மாட்டேன்.’
சொன்னேனே, சூட்சுமம்? அது இதுதான். ஒரு செயலில் ஈடுபடும்போது வேறு எதையும் எண்ணக்கூடாது. எதைச் செய்கிறோமோ, அதற்காக உழைக்க வேண்டும். தகவல் திரட்ட வேண்டும். சரியான மொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சுவாரசியமாக எழுத வேண்டும். சரியாக வராவிட்டால் திரும்பத் திரும்ப எழுத வேண்டும். அந்தக் குறிப்பிட்ட காரியம் முற்றுப் பெறும்வரை அடுத்ததை நினைக்கவே கூடாது.
பிரகாஷிடம்தான் நான் அதைக் கற்றேன். கற்றதைக் குமுதத்தில் இருந்தபோதே பரிசோதனை செய்ய ஆரம்பித்தேன். ஜங்ஷனில் காந்தி சிலைக் கதைகள் என்றொரு சிறுகதைத் தொடரை ஆரம்பித்தேன். அதே சமயம் குமுதத்தில் பாகிஸ்தான் அரசியல் வரலாறு. குமுதம் டாட்காமில் ஒரு பத்தி. குமுதம் ரிப்போர்ட்டரில் ஆப்கன் யுத்தம். நான்கு தொடரானால் என்ன? நான்கு நாள் வேலைதான் அது. ஒன்றைச் செய்யும்போது இன்னொன்றை நினைப்பதில்லை. அதற்காக அஞ்சுவதில்லை. பதறுவதில்லை. ஒன்றைச் செய்து முடித்ததும், அடுத்தத் தவணைக்கான தேதி வரும்வரை அதுபற்றி நினைப்பதுகூட இல்லை.
எழுத்துக்கும் இதற்கும் நேரடித் தொடர்புகள் கிடையாது. இது முற்றிலும் மன ஒழுக்கம் சார்ந்தது. ஆனால் எழுதுகிற அனைவருக்கும் இந்த ஒழுக்கம் அவசியம்.
ப்ரியா கல்யாணராமன் எனக்கு சம வயதுக்காரர்தான். நண்பர்தான். இருவருக்கும் பத்திரிகைத் துறையில் அன்று ஒரே சர்வீஸ்தான். ஆனால் அவர் பயின்ற ஆசிரியர்கள் வேறு. நான் பயின்ற பள்ளி வேறு. வேறொரு காலக்கட்டத்தில், வேறொரு புள்ளியில் நாங்கள் சந்திக்க நேர்ந்தபோது அவர் பயின்ற ஒரு பாடத்தை எனக்குச் சொல்லித் தந்தார். அது பிற்காலத்தில் எனக்குப் பேருதவி புரிந்தது.
2011-14 காலக்கட்டத்தில் ஒரே சமயத்தில் ஆறு தொலைக்காட்சித் தொடர்களும் இரண்டு பத்திரிகைத் தொடர்களும் எழுதினேன். பேய் பிசாசால்கூட அவ்வளவு எழுத முடியாது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எனக்கு அப்போது அதில் எந்த சிரமமும் இருந்ததாக நினைவில்லை. உட்கார்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த ‘லேபரை’க் கொடுத்தாக வேண்டும்தான். ஆனால், எழுத்தில் பதற்றமோ, கவனச் சிதைவோ, தரக் குறைவோ என்றுமே நேர்ந்ததில்லை.
காரணம், அந்த மனப் பயிற்சி. பிரகாஷ் சொல்லிக் கொடுத்தது. ஒன்றைச் செய்யும்போது அந்த ஒன்றில் மட்டுமே வாழ்ந்துவிடுவது.
Fantastic. 9 think tehse tips xan be emulated in Management lessons too. Im not having any plans of getting I to writing . But Im finding these tips to be really useful even in our everyday life.
Worth practicing .
அருமை. சிறப்பான பகிர்வு
அதைத்தான் வண்டியோட்டும்போது வேறு நினைப்பு கூடாதுன்னு சொல்வாங்க.
ஒரே நேரத்தில் 10 போர்டு விளையாடும் செஸ் திறமைசாலிகள் இதைத்தான் சொல்வார்கள். அடிப்படை ஒன்று. ஆட்ட நுணுக்கம் வேறு.ஒரு குறிப்பிட்ட நேரம் நம்மை முழுமையாக அர்ப்பணிப்பது என்பது தவம்.
ப்ரியா கல்யாணராமன் மட்டும்
பத்திரிகை ஆசிரியராக இல்லாமல்
எழுத்தாளராக மட்டுமே இருந்தால்
தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்கள் வரிசையில் அவர் இருப்பார்
அருமையான தகவல். இது எழுத்துக்கு மட்டுமல்ல வாழ்க்கையின் அனைத்துக்கும் பொருந்தும். நன்றி சார்.
தனி மனித ஒழுக்கம் முக்கியம். செய்யும் தொழிலே தெய்வம் என்ற எண்ணம் வேண்டும்.