சாதாரணமான சில தகவல்களை மட்டும் சொல்லி, அசாதாரணமான உணர்வுகளையும் சிந்தனையையும் தூண்டுவது நல்ல எழுத்தின் இயல்புகளுள் ஒன்று. மூஞ்சியில் முள்ளைக் கட்டிக்கொண்டு எழுதினால்தான் பெரிய எழுத்தாளர் என்பதல்ல. மிகப் பெரிய சங்கதிகளைக் கூட எளிய நகைச்சுவை உணர்வுடன் விவரிக்கும்போது, சொல்ல வரும் செய்தியின் வீரியம் பன்மடங்கு அதிகரிக்கும்.
ஓர் உதாரணம் தருகிறேன். இது அ. முத்துலிங்கம் எழுதிய ‘கனடாவில் கிணறு’ என்ற கட்டுரையின் முதல் இரு பத்திகள். இதன் முதல் பத்தியில் ஆசிரியர் வசிக்கும் டொரண்டோ நகரத்தின் வழக்கம் ஒன்றைக் குறித்துச் சொல்கிறார். அதாவது, வாரம்தோறும் புதன் கிழமை அன்று காலை அந்நகரில் குப்பை சேகரிக்கும் வண்டி வரும். அதனால், முதல் நாள் இரவே ஒவ்வொரு வீட்டினரும் அவ்வாரக் குப்பைகளைச் சேகரித்து மூட்டை கட்டி வீட்டுக்கு வெளியே வைத்துவிடுவார்கள்.
இரண்டாவது பத்தியில் இதற்குத் தொடர்பில்லாத இன்னொரு விஷயத்தை ஆரம்பிக்கிறார். ஒரு பெண் வயசுக்கு வந்துவிட்டால் குப்பைகளைக் குவித்து அதன்மீது அவளை உட்கார வைக்கும் தமிழ் கலாசாரத்தைச் சுட்டிக்காட்டி, திடீரென்று ஒரு செவ்வாய்க்கிழமை இரவு ஒரு பெண் ருதுவாகிவிட்ட விவரத்தைச் சொல்கிறார்.
இவ்வளவு போதும். அந்த இரண்டு பத்திகளிலும் சேர்த்து மொத்தமாகப் பத்து சொற்றொடர்கள் உள்ளன. அவற்றை நம்பர் போட்டுக் கீழே தருகிறேன். கவனமாகப் படியுங்கள்.
1. ரொறண்டோ நகரத்தில் செவ்வாய்க்கிழமை பின்னேரங்கள் விநோதமான வடிவுடன் இருக்கும்.
2. ஒவ்வொரு வீட்டு முகப்பிலும் கனமான கருப்பு பொலிதீன் பைகளில் அந்தந்த வீட்டுக் குப்பைகள் நிரப்பப்பட்டு, சிவப்பு நாடாவினால் இறுக்கப்பட்டுக் காட்சியளிக்கும்.
3. ஒரு வீடாவது இந்தச் சடங்கில் இருந்து தவறாது.
4. புதன் கிழமை அதிகாலைகளில் பெரிய குப்பை வண்டிகள் வந்து அவற்றை அப்புறப்படுத்திவிடும்.
5. மறுபடியும் வீட்டுக் குப்பைகளை அகற்ற ஒரு வாரம் காத்திருக்க வேண்டி வரும்.
6. இது இப்படியிருக்க, ஒரு செவ்வாய் இரவு தமிழ்ச் சிறுமி ஒருத்தி காலநேரம் தெரியாது ருதுவாகிவிட்டாள்.
7. தமிழ் சம்பிரதாயப்படி பெண்ணைக் குப்பையின் மேலே இருத்தி, உடனே தலைக்குத் தண்ணீர் வார்க்க வேண்டும்.
8. செவ்வாய் நடுநிசியில் ரொறண்டோ நகரத்தில் குப்பைக்கு எங்கே போவது?
9. பனிக் குளிரிலே நனைந்து கிடந்த குப்பைப் பைகளைத் திரும்பவும் வீட்டினுள்ளே கொண்டு வந்து பெண்ணைக் குப்பையிலே இருத்தி சடங்கைச் செய்து முடித்தார்களாம்.
அந்தப் பத்தாவது வரியை மட்டும் கடைசியில் தருகிறேன். மேலே உள்ளதைக் கவனமாகத் திரும்பவும் படியுங்கள். இரண்டு வெவ்வேறு தகவல்கள். முதலாவது, கனடாவின் டொரண்டோ நகர நடைமுறை. இரண்டாவது, ஈழத் தமிழ்க் குடும்பங்களின் நடைமுறை.
கொட்டும் பனிக்காலம் ஆனாலும் குப்பை அள்ளும் பணி டொரண்டோவில் தடைபடுவதில்லை. ஊர் சுத்தம் அவர்களுக்கு அவ்வளவு முக்கியம். கட்டி வைத்த குப்பை மூட்டையை அவிழ்த்து எடுத்து வந்து வீட்டில் கொட்டியாவது குழந்தையை அதன்மீது அமர வைத்து சடங்கு செய்தாக வேண்டும். நமக்கு நமது பழக்க வழக்கங்கள் அவ்வளவு முக்கியம்.
மேலை-கீழை மனோபாவ வேறுபாட்டை இதனினும் நுணுக்கமாக எப்படிக் காட்சிப்படுத்த முடியும்? வெறும் பத்து சொற்றொடர்களில் இது நிகழ்ந்துவிடுகிறது. ஆனால் பத்து நிமிடங்களாவது இதைச் சிந்திக்காமல் நம்மால் மேற்கொண்டு படித்துக்கொண்டு போக முடிவதில்லை.
நல்ல எழுத்து என்பது இப்படித்தான் இருக்கும்.
இப்போது அந்த இரண்டாவது பத்தியின் கடைசி வரியைப் படியுங்கள். முன்னர் சொல்லாது விட்ட 10வது வரி.
‘அப்பாடா. கலாசாரம் காப்பாற்றப்பட்டுவிட்டது!’
நல்ல வேளை ருதுவான நேரம் நல்ல நேரம். ஒரு 5 மணி நேரம் தாமதமாக ருதுவாகி இருந்தால் என்னவாயிருக்கும்? 🤔 😜