கதை அல்லாத வேறு எதை நீங்கள் எழுதினாலும் அது நன்றாக இல்லாமல் போக வாய்ப்பே கிடையாது. non-fiction எழுத்து சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் விவரம் பொதிந்ததாகவும் இருக்கச் சில எளிய உத்திகள் உள்ளன.
ஒரு கட்டுரையோ, புத்தகமோ, ஃபேஸ்புக் போஸ்டோ எழுதுகிறீர்கள். நாம் எழுதியது நன்றாக உள்ளதா இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்வது?
அடுத்தவர்கள் படித்துவிட்டுச் சொல்வது இருக்கட்டும். எழுதி முடித்த கணத்தில் நமக்கே அது தெரிந்துவிட வேண்டும். ஒரு பத்து கட்டளைகள் உள்ளன. நீங்கள் எதை எழுதினாலும், எழுதி முடித்த பின்பு இந்தப் பத்து பொருத்தமும் சரியாக உள்ளதா பாருங்கள். திருமணம் என்றால், பத்தில் ஆறேழு பொருத்தம் இருந்தால் போதும். ஜோடி சேர்த்து அனுப்பிவிடலாம். ஆனால் எழுத்தில் அது சாத்தியமில்லை. பத்தில் ஒன்று பழுதானாலும் நீங்கள் எழுதியது எடுபடாமல் போய்விடும்.
1. சொல்ல வரும் விஷயம் எதுவானாலும் சரி. எவ்வளவு தீவிரமானதானாலும் சரி. எவ்வளவு சிக்கல் மிக்கதானாலும் சரி. எவ்வளவு பக்கங்கள் நீளக்கூடியதானாலும் சரி. அதன் சுருக்கத்தை முதல் சொற்றொடரில் சொல்லி முடித்துவிட வேண்டும். பிறகு எழுதுகிற அனைத்துமே அதற்கான விளக்கமாகத்தான் இருக்க வேண்டும்.
2. செயப்பாட்டு வினை வரவே கூடாது.
3. சொல்லப்பட்டது, கேள்விப்பட்டது, ஊகம், நினைத்துக்கொண்டது, காதில் விழுந்தது, இருந்திருக்கலாம், நடந்திருக்கலாம், எனக்குத் தெரியவில்லை இப்படிப்பட்ட முடிப்புகள் எந்தச் சொற்றொடரின் இறுதியிலும் இருக்கக்கூடாது. குத்துமதிப்பாகத்தான் ஒன்றைச் சொல்ல முடியும் என்றால் அதை பத்தியின் முதல் வரியில் உடைத்துச் சொல்லிவிட வேண்டும்.
4. கதை அல்லாத எந்த எழுத்திலும் நபர்களை வர்ணிக்கவே கூடாது. ஆனால் இடங்களைக் கண்டிப்பாகச் சுட்டிக் காட்ட வேண்டும்.
5. அட்ஜக்டிவ்களை அறவே தவிர்க்க வேண்டும். முழுமையான மொழித் தேர்ச்சியும் நுட்பங்கள் சார்ந்த பூரணத் தெளிவும் (இது எழுத ஆரம்பித்து, குறைந்தது பத்தாண்டுகளுக்குப் பிறகு வரலாம்.) உண்டான பிறகு துருத்திக்கொண்டு சிரிக்காமல், தேவைக்கேற்பக் கையாளலாம்.
6. புள்ளி விவரங்களைக் கதை ஆக்க வேண்டும். எண்களாக அடுக்கிக்கொண்டே போனால் யாரும் படிக்க மாட்டார்கள்.
7. அவசியம் இருந்தால் ஒழிய அந்நியப் பெயர்களை அதிகம் பயன்படுத்தக்கூடாது.
8. அபுனைவு எழுத்தின் நோக்கமே அடுத்தவருக்கு ஒரு புதிய தகவலைத் தெரியப்படுத்துவதுதான். நீங்கள் எழுதுவது புதிதுதானா என்று ஒரு கணம் சிந்திக்கவும். பலபேர் சொன்னதுதான் என்றால் எழுதாதீர்கள்.
9. மொழிக் கூர்மை முக்கியம். முழுப் படைப்பையும் எழுதி முடித்ததும் ஒவ்வொரு சொற்றொடரிலும் மூன்றில் ஒரு பங்கு சொற்களைக் கண்டிப்பாக நீக்க வேண்டும். (அதற்கு இடம் விட்டுத்தான் எழுதியிருப்பீர்கள்!) அப்போதுதான் வேகமாக வாசிக்க முடியும்.
10. எளிய பதம். எளிய சந்தங்கள். பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு என்று தனது கவிதைகளுக்கு பாரதியார் இலக்கணம் சொன்னார். இதுதான் கட்டுரை எழுத்துக்கும் உலகப் பொதுவான இலக்கணம்.
Super தலைவா
எனது facebook பக்கத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறேன். நீங்கள் சொன்ன கருத்துக்களின் மூலம் என் எழுத்தை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நன்றி சார்.
நன்றி.
உங்களது இந்த அளப்பரிய சேவைக்கு மிக்க நன்றி.. எவ்வளவு நுணுக்கமான விஷயங்கள்!