Skip to content
Home » Blog » ஆயுதம் பழகுதல்

ஆயுதம் பழகுதல்

நான் கடிதங்கள் அதிகம் எழுதியதில்லை. நினைவு தெரிந்து இரண்டு பேருக்குத்தான் ஆசை ஆசையாகக் கடிதம் எழுதியிருக்கிறேன். ஒருவர் தி.க. சிவசங்கரன். இன்னொருவர் லா.ச.ரா. எனக்கு அவர்கள் இருவரிடம் இருந்தும் வரும் பதில் கடிதங்கள் மிகுந்த உற்சாகத்தைத் தரும் என்பதாலேயே மாதம் ஒரு கடிதமாவது இருவருக்கும் எழுதிவிடுவேன். தி.க.சியைப் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இந்தக் குறிப்பு லா.ச.ராவின் கடிதங்களைப் பற்றியது.

ஒரு போஸ்ட் கார்டில் அதிகபட்சம் எவ்வளவு சொற்களை இட்டு நிரப்ப முடியுமோ, லா.ச.ரா அதைச் செய்துவிடுவார். அதில் அடித்தல், திருத்தல் எல்லாமும் இருக்கும். ஆனாலும் பார்த்தால், பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலவும் இருக்கும். அழகான கையெழுத்து என்று சொல்ல முடியாதுதான். ஓர் எளிய வாசகனிடம் அவருக்கு இருந்த அக்கறை அதை அழகுபடுத்திக் காட்டியிருக்க வேண்டும். நான் கடிதங்களில் அவரது கதைகளைப் பற்றித்தான் பெரும்பாலும் கேட்பேன். அந்த வயதில் (15-16) எனக்கு அவருடைய ஒரு சிறுகதை கூடப் புரிந்ததில்லை. ஆனால் புரியாததைப் புரியவில்லை; விளக்குங்கள் என்று கேட்க வெட்கப்பட்டதில்லை.

இப்போது எண்ணிப் பார்க்கிறேன். லா.ச.ரா. ஒரு கதைக்குக் கூட எனக்கு விளக்கம் சொன்னதில்லை. ஆனால் ஒவ்வொரு பதில் கடிதத்திலும் நான் திருப்தி அடையும்படியாக எதையாவது எழுதிவிடுவார். அந்தக் கடிதங்களையெல்லாம் நான் பத்திரப்படுத்தியிருக்க வேண்டும். அப்போது அது தோன்றாமல் போய்விட்டது. ஆனால் அவரது தபால் கார்டுகளில் இருந்து நான் பெற்றவற்றைப் பிறகு எப்போதோ குறிப்பெழுதி வைத்திருக்கிறேன். அதில் இருந்து சிலவற்றைச் சொல்கிறேன்.

* புரியாத எதையும் வெறுக்காதே. பூடகத் தன்மைக்கு ஒரு பிரத்தியேக அழகு உண்டு.

* பூடகமான எழுத்து என்று ஒன்றைத் திட்டமிட்டு உருவாக்க முடியாது. இயற்கை சிலவற்றை உத்தேசிக்கும். பலாக் கனிக்கு அத்தனை முரட்டுத் தோல் அமையாவிட்டால் பறவைகளும் அணிலும் அதை உனக்கு ஒருபோதும் விட்டு வைக்காது.

* எழுத்து நன்றாக வர வேண்டுமென்றால் மனநிலை பனிப்பாளம் போலிருக்க வேண்டும். எந்தக் கணமும் கசியத் தயாராக. ஆனால் அபாரமான உறுதித் தன்மையுடன்.

* சௌந்தர்ய லஹரிக்கு யாரிடமாவது கேட்டு அர்த்தம் படி. சங்கரன், ஒரு மகாகவி. அநியாயமாக சன்னியாசம் வாங்கிக்கொண்டு போய்விட்டான்.

* சம்சாரத்தின் இயல்பு, காலைப் பிடித்து இழுத்துக்கொண்டே இருப்பது. எழுத்தாளனின் இயல்பு, விடாமல் வழுக்கு மரத்தில் ஏறிக்கொண்டே இருப்பது. இரண்டுமே சுவாரசியம்தான்.

* சொற்களைவிடக் கூரான ஆயுதம் வேறு கிடையாது. ஆயுதம் எடுப்பவன் அதைச் சரியாகக் கையாளப் பழக வேண்டும்.

* எனக்கு சத்தம் சரியாக இருக்க வேண்டும். எழுதுகிற எதையும் காதில் போட்டுத் தட்டிப் பார்த்துவிட்டுத்தான் எழுதுவேன்.

* தினமும் பத்துப் பக்கமாவது படி. பத்து வரி எழுது. எழுதிய உடனே பிரசுரித்துவிட வேண்டும் என்று நினைக்காதே. எழுதிக்கொண்டே இரு. என்றாவது அது தானாக நிகழும்.

* கஷ்டப்பட்டாவது நன்றாக இங்கிலீஷ் கற்றுக்கொண்டு விடு. ஹெமிங்வேவை மட்டும் ரசிக்கவே ஒரு ஆயுசு போதாது.

இதில் உள்ள கடைசிக் குறிப்புக்கு ஒரு கதை உண்டு. என் அப்பா ஆங்கில ஆசிரியர். எனக்கு ஆங்கில இலக்கணம் சொல்லித் தந்தவர் அவர்தான். ஒருநாள் அவர் வைத்த டெஸ்டில் நிறையத் தவறுகள் செய்திருந்தேன். கோபத்தில் அடித்துவிட்டார். அந்த துக்கத்தை மறுநாள் எழுதிய கடிதத்தில் சொல்லியிருந்தேன். அதற்குத்தான் இது.

3 thoughts on “ஆயுதம் பழகுதல்”

  1. சொற்களைவிடக் கூரான ஆயுதம் வேறு கிடையாது. ஆயுதம் எடுப்பவன் அதைச் சரியாகக் கையாளப் பழக வேண்டும்.

    ரொம்ப முக்கியமான விஷயம் இது.

  2. அனுபவ மொழிகள்.அத்தனையும் ஞாபகத்தில் இருந்து எழுதுகிறீர்கள்.
    எழுத்து என்ற ஆயுதம் பற்றி நான் இன்னும் முழுமையாய் அறிந்திருககவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *