Skip to content
Home » Blog » சிறிய விஷயங்களைப் பழகுதல்

சிறிய விஷயங்களைப் பழகுதல்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புது டெல்லியில் நடைபெற்ற ஓர் எழுத்து – எடிட்டிங் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்வதற்குச் சென்றிருந்தேன். டெல்லியே மிதக்கும் அளவுக்கு மழையும் வெள்ளமுமாக இருந்த ஒரு வாரத்தில், அறிவித்துவிட்ட காரணத்தால் மட்டுமே அந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள். இரண்டு நாள் வகுப்பு. ஆறு செஷன். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பத்திரிகையாளர்களும் பதிப்பாசிரியர்களும் அந்தப் பயிலரங்கில் கலந்துகொண்டார்கள். மிக மூத்த எழுத்தாளர்கள் சிலரும் நாட்டின் தலைசிறந்த எடிட்டர்கள் ஓரிருவரும் வகுப்புகளை நடத்தினார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது அந்த நிகழ்ச்சி.

அந்தப் பயிலரங்கில் திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை வலியுறுத்தினார்கள். ‘எழுதும் நேரம், எழுதும் இடம், சூழ்நிலை போன்றவற்றைக் கூடிய வரை மாற்றாமல் இருக்கப் பழகுங்கள்.’

எழுத்துக்கு நேரடிச் சம்பந்தம் இல்லாவிட்டாலும் இது ஒருவரது எழுத்தைக் கணிசமான அளவில் பாதிக்கக்கூடிய விஷயம் என்பதில் சந்தேகமில்லை.

ஒவ்வொரு நாளும் கண் விழித்து எழுந்ததும் முதல் வேலையாக எழுத உட்கார்ந்துவிடுவேன் என்று சல்மான் ருஷ்டி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். பல் துலக்கி, ஒரு காப்பி அல்லது தேநீர் அருந்தி, அரை மணி நேரம் நடந்துவிட்டு வந்து எழுதினால் ஆகாதா என்றால், முடியும். ஆனால் அது அவருக்குப் பழக்கமில்லை. அவரது பழக்கம், படுக்கையில் இருந்து எழுந்ததும் நேரே வந்து எழுதும் இடத்தில் அமர்ந்துவிடுவது. இடைவிடாமல் மூன்று மணி நேரம் வேலை செய்துவிட்டு அதன் பிறகுதான் அடுத்த சிந்தனை. நாற்பதாண்டுகளுக்கு மேலாக இந்தப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதாகச் சொல்கிறார் ருஷ்டி.

பாரிஸ் ரெவ்யு இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் இடாலோ கால்வினோ, தன்னால் மதியப் பொழுதில் மட்டுமே எழுத முடிகிறது என்கிறார்.

சுந்தர ராமசாமி, எழுதத் தொடங்குவதற்கு முன்னால் செய்துகொள்ளும் ஆயத்தங்கள் குறித்து ஜெயமோகன் எழுதியிருக்கிறார். வெள்ளைத் தாள்களை ஒழுங்காக வெட்டி அடுக்கி எடுத்து வைத்துக்கொள்வது, பென்சில்களைக் கூராக சீவி வைப்பது போன்றவற்றைக்கூட எழுத்து மனநிலைக்கான ஆயத்தங்களுள் ஒன்றாகக் கடைப்பிடித்திருக்கிறார் அவர்.

அசோகமித்திரன் கட்டுரை ஒன்றில், தான் தினமும் அமர்ந்து எழுதும் பூங்கா பெஞ்சைக் குறித்து எழுதியிருப்பார். என்றோ ஒருநாள் அவர் எழுதச் சென்றபோது அந்த பெஞ்சில் வேறு யாரோ ஒருவர் கால் நீட்டிப் படுத்திருந்திருக்கிறார். ‘என் பெஞ்சு எனக்கு இன்று இல்லாமல் போய்விட்டது’ என்று ஒரு வேகத்தில் எழுதிவிட்டு, ‘ஆ, என் பெஞ்சு!’ என்று ஒரு பொதுச் சொத்தைத் தனி உரிமை கொள்வது சார்ந்த தவறினையும் கையோடு விமரிசித்துவிடுவார்.

இதெல்லாம் சிறிய விஷயங்கள்தாம். ஆனால் எழுத்து நேர்த்தியுடன் இவையும் மறைமுகமாகத் தொடர்புகொள்ளவே செய்யும்.

நான் எழுத ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரை எட்டு வீடுகள் மாறியிருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் நான் எழுதும் இடத்தை ஒரே மாதிரிதான் வடிவமைத்துக்கொண்டிருக்கிறேன். என்ன பெரிய வடிவமைப்பு? நாமெல்லாம் என்ன அரண்மனைவாசிகளா? எல்லாம் பத்துக்குப் பத்து அறைகள்தாம். அது ஒரு பிரச்னை இல்லை. ஆனால் அந்த இண்டு இடுக்கிலும் நாம் எங்கே உட்கார்கிறோம், நம்மைச் சுற்றி என்ன இருக்க வேண்டும், நமக்கு எதிரே என்ன, பக்கவாட்டில் என்ன, எந்த நாற்காலியில் உட்கார்கிறோம், மேசை எப்படி இருக்க வேண்டும் – இதெல்லாம் எனக்கு எப்போதும் முக்கியம். நாள் முழுவதும் எழுதிக்கொண்டே இருந்தாலும் நாவல் எழுதும் நாள்களில் நிச்சயமாக இரவு பத்து மணிக்கு மேலேதான் என்னால் அதில் ஈடுபட முடியும். ஒரு மாறுதலுக்கு இடாலோ கால்வினோவைப் போல மதியம் எழுதலாம் என்று உட்கார்ந்தால் ஒரு சொல் கூட வராது என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை.

இதெல்லாம் பெரிய விஷயமா என்று நினைத்தால், இல்லைதான். ஆனால் பல சமயம் சிறிய விஷயங்களின் அழகுதான் கலை மனத்துக்கு இன்றியமையாததாக இருந்துவிடுகிறது. நான் கலந்துகொண்ட அந்த டெல்லி பயிலரங்கில் அதைத்தான் சொன்னார்கள். ‘என்ன ஆனாலும் உங்கள் பழக்கத்தை / விருப்பங்களை மாற்றிக்கொள்ளாதீர்கள்.’

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எழுதுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். அப்போதுதான் அந்த நேரத்தில் எழுதாத தினங்களில் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு, உடனே செயல்பட வைக்கும்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே அமர்ந்து எழுதுங்கள். அப்போதுதான் அந்த இடம் எப்போதும் நம்மை ஈர்த்துக்கொண்டே இருக்கும். நாம் இல்லாத நேரத்திலும் நம் சிந்தனைகள் அங்கே சுற்றி வருவது போன்ற மாயத் தோற்றம் ஒன்று எழும். வெளியே கிளம்பும்போதெல்லாம் மறக்காமல் செருப்பைப் போட்டுக்கொள்வது போல, அந்தக் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து அமரும் கணத்தில், விட்ட இடத்தில் இருந்து அந்தச் சிந்தனைகளை இழுத்து வைத்துக்கொண்டு மீண்டும் தொடர முடியும்.

எதைப் பார்க்கும்போதெல்லாம் மனம் நிதானமும் அமைதியும் கொள்ளுமோ அது எழுதும்போது கண் முன்னால் இருக்க வேண்டும். இது மிக மிக முக்கியம் என்று நினைக்கிறேன். என் எழுது மேசையில் எப்போதும் ஒரு யானை பொம்மை இருக்கும். நான் வணங்கும் சித்த புருஷர்களின் புகைப்படங்கள் இருக்கும். இவை நம் எழுத்தை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லைதான். ஆனால் தேவையற்ற சிந்தனையில் மனம் ஆழ்ந்துவிடாமல் காக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் சித்தர் படம்தான் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு சிலுக்கு ஸ்மிதா பிடிக்குமென்றால் அவர் படத்தைக்கூட வைத்துக்கொள்ளலாம். உங்கள் கண்ணில் படுகிற எதுவும் உங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே முக்கியம்.

எழுதுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. ஏனோ எழுதத்தான் முடிவதில்லை என்பவர்கள் இம்மாதிரியான சிறிய விஷயங்களில் கொஞ்சம் அக்கறை செலுத்திப் பார்த்தால் பலன் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

3 thoughts on “சிறிய விஷயங்களைப் பழகுதல்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *