Skip to content
Home » Blog » கலையும் கட்டங்களும்

கலையும் கட்டங்களும்

அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலைப் படித்திருக்கிறீர்களா? அதை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை வரிசையாகப் படிக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. இஷ்டப்படி எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் முதலில் படிக்கலாம். அதற்குப் பிறகும் மாற்றி மாற்றிப் படிக்கலாம். கடைசியிலிருந்து படித்துக்கொண்டே வரலாம். நடுவிலிருந்து இரண்டு பக்கமும் மாறி மாறிப் பயணம் செய்யலாம். அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு தனிச் சிறுகதையாகக் கருதிவிட முடியும். கதையை அல்லாமல், களத்தை மையமாக வைத்த படைப்பு அது. ஒரே களம். வேறு வேறு நபர்கள். ஆனால் அத்தனை சந்தர்ப்பங்களிலும் ஒரு பார்வையாளராக அசோகமித்திரன் அங்கே இருப்பார்.

1973ம் ஆண்டு, அமெரிக்காவில் அயோவா நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் உலகெங்கிலும் இருந்து சில எழுத்தாளர்களை வரவழைத்து சுமார் ஏழு மாத காலத்துக்கு ஓர் எழுத்துப் பட்டறை நடத்தியது. நிறைய தென்னமெரிக்க எழுத்தாளர்கள், ஐரோப்பிய எழுத்தாளர்கள், தைவான், ஜப்பான் போன்ற கிழக்காசிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று கலந்துகொண்ட அந்த எழுத்துப் பட்டறைக்கு இந்தியாவிலிருந்து அசோகமித்திரன் போயிருந்தார்.

அப்போது ‘தாட்’ என்றொரு ஆங்கிலச் சிற்றிதழ் வெளிவந்துகொண்டிருந்தது. அதில் தொடர்ந்து மொழிபெயர்ப்பாகிக் கொண்டிருந்த அசோகமித்திரனின் சிறுகதைகளைப் படித்துவிட்டு, அமெரிக்க தூதரகத்தின் மூலம் அவரை இங்கே தொடர்புகொண்டு அழைத்திருந்தார்கள். அதே அயோவா பல்கலைக்கழகம் முந்தைய வருடங்களில் நடத்திய எழுத்துப் பட்டறைக்குப் போய் வந்திருந்த வங்காள எழுத்தாளர் சுநில் கங்கோபாத்யாயவும் அங்கே அசோகமித்திரனைப் பற்றிச் சொல்லிவிட்டு வந்திருந்ததால் இந்த வாய்ப்பு அவரைத் தேடி வந்தது.

அசோகமித்திரன் அயோவாவுக்குப் போன சமயம், அமெரிக்கா பற்றி எரிந்துகொண்டிருந்தது. ஜனாதிபதியாக அப்போதிருந்த நிக்ஸன், வாட்டர்கேட் ஊழல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார். தினசரி பொழுது விடிந்தால், குளிரும் ஜனாதிபதி விவகாரமும்தான் முதல் வணக்கம் சொல்லும். பிறகு குளிர் கோட்டை மாட்டிக்கொண்டு பல்கலைக்கழகத்துக்குப் போனால் இலக்கியப் பேச்சுகள். வாத, விவாதங்கள். அசோகமித்திரன் போன்ற எழுத்தாளருக்குக் கருத்தரங்குகளைக் காட்டிலும் அதற்கு வரும் பிற நாட்டு எழுத்தாளர்களை கவனிப்பதுதான் முக்கியமான ஆர்வமாக இருக்க முடியும். எழுத்தாளர்கள்தான் எத்தனை வினோதமானவர்கள்! நூறு விதமான விதைகளை ஒரே தொட்டியில் விதைத்து, அது முளைப்பதை ஏழு மாதம் கூர்ந்து கவனிப்பதென்பது எப்பேர்ப்பட்ட அரிய வாய்ப்பு!

ஒற்றனில் ஒரு எத்தியோப்பிய எழுத்தாளன் வருவான். அயோவாவுக்கு வந்து சேரும் முதல் நாளில் ஏகப்பட்ட பணம் கொடுத்து துணி வாங்கி கோட் சூட் தைத்துப் போட்டுக்கொள்ளும் அவன், அந்த ஏழு மாத காலமும் அந்த கோட் சூட்டுடனேயே வலம் வந்துகொண்டிருப்பான். வாரம் தோறும் எழுத்தாளர்கள் தங்களுக்குத் தேவையான உணவுப்பொருள்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டுக்குப் போவார்கள். மேற்படி எத்தியோப்பிய எழுத்தாளர், ஒரு கல்யாணத்துக்கு மளிகைச் சாமான் வாங்குவது போல வாங்கிக் குவித்து விடுவார். வீணாவது பற்றியோ, செலவு ஆவது பற்றியோ கவலை கிடையாது. எத்தியோப்பியாவில் அவன் மிகப் பிரபலமான எழுத்தாளன். அவனது புத்தகங்களை அவனேதான் சொந்தமாகப் பதிப்பித்துக் கொள்வான். அந்த நாட்டு இளவரசனுக்கு அவன் நண்பன் என்பதால் விற்பனைப் பிரச்னை கூட இருக்காது.

இன்னொரு ஒடிசலான, குடிகார எழுத்தாளன். ஊருக்கு வந்து சேர்ந்ததும் ஒரு டைப் ரைட்டர் வாங்குவதற்காக அசோகமித்திரனை ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு அழைத்துப் போவான். கே-மார்ட் என்கிற அந்தக் கடையில் அவனுக்கு அசோகமித்திரன் வாங்கித் தரும் டைப் ரைட்டர் கொஞ்சம் வினோதமானது. ஒரு எழுத்தை அழுத்தினால் நான்கு எழுத்து தூரத்துக்கு ஓடிவிடும். கோபித்துக்கொண்டு திருப்பிக் கொடுத்தாலும் கே-மார்ட்காரர்கள் வருத்தப்படவே மாட்டார்கள். உடனே மாற்றிக் கொடுத்துவிட்டு, அந்த டைப் ரைட்டரை மீண்டும் அப்படியே விற்பனைக்கு வைத்து விடுவார்கள். இதே கடையில் அசோகமித்திரன் ஒரு குளிர்கால ஷூ வாங்கிப் போட்டுக்கொண்டு கால் வீங்கி படாதபாடு பட்டிருக்கிறார். கே-மார்ட் சரக்குகளின் பிரத்தியேக குணம் அந்த ஷூவுக்கு மட்டும் எப்படி இல்லாமல் போயிருக்கும்?

கஜுகோ என்றொரு ஜப்பானியப் பெண் கவிஞர். பால் எங்கிள் என்றொரு இலக்கியப் பேராசிரியர். ஜான் ஸ்டுவர்ட் என்கிற விடுதி மேலாளர். தைவான் சிறுகதையாசிரியன், சிலி நாவலாசிரியன். இலக்கியம் படிக்க வந்து காதலில் மாட்டி அவதிப்படும் ஒரு மாணவி என்று நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் வேறு வேறு நபர்களால் நிறையும் ஆச்சர்யம் இது.

நபர்கள் மட்டுமல்ல. அசோகமித்திரனின் இந்த நாவலில் அயோவா நகரத்தின் குளிரும்கூட ஒரு கதா பாத்திரமாகவே இருக்கும். குளிர் என்றால் சாதாரணக் குளிர் அல்ல. வாசிக்கும்போதே எலும்புகளை நடுங்கச் செய்யும் குளிர். தரையெங்கும் படர்ந்திருந்த பனியில் அசோகமித்திரன் ஒருமுறை சறுக்கி விழுந்து அடிபட்டிருக்கிறார். அந்த ஒரு அத்தியாயம் முழுவதும் நமக்கும் வலித்துக்கொண்டே இருக்கும்.

ஒற்றனில் நமக்குக் காணக் கிடைக்கும் ஒவ்வொரு எழுத்தாளரும் ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்கள். வேறு வேறு கலாசாரத்திலிருந்து வந்தவர்கள். தென்னமெரிக்க எழுத்தாளர்களெல்லாம் சர்வாதிகார ஆட்சியையும் தினமொரு புரட்சியையும் பார்த்துக்கொண்டிருப்பவர்கள். ஆசிய எழுத்தாளர்கள் எல்லாம் கனவுகளை மட்டும் சுமந்து நிற்பவர்கள். கண்டப் பாகுபாடில்லாமல் ஏழை தேசங்களிலிருந்து வந்து கூடும் எழுத்தாளர்கள் அத்தனை பேருக்குமே அமெரிக்கா வியப்பையும் பிரமிப்பையும் தரத் தவறுவதில்லை. அவரவர் தேசங்களில் சிங்கம்போல் வலம் வரும் படைப்பாளிகள் அத்தனைப் பேரும் அமெரிக்காவுக்கு வந்தவுடன்தான் எப்படி கார்ட்டூன் சிங்கங்களாக மாறிவிடுகிறார்கள்!

இது கதை சுவாரசியத்துக்காகச் செய்யப்பட்ட வேலையல்ல. மாறாக, ஒவ்வொரு எழுத்தாளரையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஒரு தேர்ந்த நிருபரின் கூர்மையான பார்வையுடன் கவனித்து, அலசிப்பார்த்து, மனத்துக்குள் ஊறவைத்து அதன்பின் ஓர் எழுத்தாளரின் அசலான பரிவு கலந்த பார்வையில் பதிவு செய்திருக்கிறார் அசோகமித்திரன். கதையில் நகைச்சுவையான கட்டங்கள் ஏராளமாக உண்டு. ஆனால் ஒவ்வொரு நகைச்சுவையும் வாசித்த மறுகணம் உறையச் செய்துவிடுபவை. அயோவாவின் பனிமழை போலவே. பட்டறைக்கு வந்திருந்த ஒரு ஜப்பானியப் பெண் கவியைத் தனக்கு அறிமுகப்படுத்தி வைக்கவில்லை என்பதற்காக அசோகமித்திரனை அந்த எத்தியோப்பிய எழுத்தாளன் படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அடித்துக் கீழே தள்ளிவிடும் அளவுக்கு எழும் அவனுடைய முரட்டு சுபாவத்தின் பின்னணியில் அவன் வளர்ந்த கலாசாரம் இருக்கிறதா? அல்லது உலகப் பொதுவான பொறாமை மட்டும்தானா?

 

அசோகமித்திரனிடம் ஒரு சமயம் இது பற்றிக் கேட்டேன். “எழுத்தாளர்கள் என்கிற பொதுவான அம்சம் இருந்தாலும் ஒவ்வொரு எழுத்தாளரும் தத்தமது தேசங்கள், மற்ற எழுத்தாளர்களின் தேசங்களோடு கொண்டுள்ள உறவின் பாதிப்பிலிருந்து மீளவே இல்லை. சிலி எழுத்தாளரைக் கண்டால் பெரு எழுத்தாளருக்குப் பிடிக்காது. தைவான்காரரை ஜப்பான்காரருக்குப் பிடிக்காது. பெண் எழுத்தாளர்கள், சக பெண் எழுத்தாளர்களை ஒருபோதும் ஒரு பொருட்டாக மதிக்கவே மாட்டார்கள். நேரில் சந்திக்கும்போது மட்டும் கட்டிப்பிடித்து அன்பைப் பொழிவார்கள். பின்னால் பேசும் பேச்சைக் கேட்கவேண்டுமே!” என்றார்.

இந்த நாவலின் ஒரு குறிப்பிட்ட அத்தியாயம் – அதில் வரும் ஒரு பெரு தேசத்து எழுத்தாளனைப் பற்றி வாசித்தபோது எனக்கு ஏற்பட்ட வியப்பைச் சொல்லாமல் இருக்க முடியாது. அந்த அத்தியாயத்துக்கு ‘மகா ஒற்றன்’ என்று பெயர். அது, அந்த பெரு தேசத்து எழுத்தாளன் அயோவாவுக்கு வந்து எழுதிய நாவலின் தலைப்பும் கூட.

எழுத்தாளர் பட்டறைக்கு வந்துவிட்டு யாராவது அறையைப் பூட்டிக்கொண்டு உட்கார்ந்து நாவல் எழுதுவார்களா?

ஆமாம், அவன் அப்படித்தான் இருந்தான் என்றார் அசோகமித்திரன். ஒரு மாலைப்பொழுதில் அண்ணாசாலையில் உள்ள புக்பாயிண்ட் அரங்கில் ஏதோ ஒரு கூட்டத்தில் சந்தித்தபோது பேசிக்கொண்டிருந்தேன். அந்தப் பெரு தேசத்து எழுத்தாளனின் பெயர் ப்ராவோ. பெயர் உண்டாக்கும் பிம்பம் போலவே உயர்ந்த, அகன்ற மனிதன். பெரிய மீசை வேறு வைத்திருந்தானாம். அசோகமித்திரன் சொன்னார். திடீரென்று ஒரு நாவல் எழுத வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்பட்டு, பட்டறை வகுப்புகளுக்கெல்லாம் போகாமல் அறைக்கதவை இழுத்துச் சாத்திக்கொண்டு எழுத ஆரம்பித்துவிட்டான் அவன்.

அசோகமித்திரன் மட்டும் ஒரு நாள் அப்படி அவன் என்னதான் எழுதுகிறான் என்று பார்க்கப் போயிருக்கிறார். ப்ராவோ, எழுதிக்கொண்டு இருந்தான். அவனது மேசைக்கு எதிரே சுவரில் ஒரு சார்ட் ஒட்டப்பட்டிருந்தது. செஸ் போர்ட் மாதிரி நிறைய கட்டங்கள் போட்டு, வண்ண பென்சில்களால் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒரு நிறம் கொடுத்திருந்தான்.

அசோகமித்திரனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. “இது என்ன?” என்று கேட்டிருக்கிறார்.

“இதுதான் நான் எழுதப்போகும் நாவல்” என்று ப்ராவோ சொன்னான்.

“நாவலா! இதுவா!?”

“ஆமாம். இதுதான் நாவல். ஒவ்வொரு கட்டத்திலும் உள்ள வண்ணம் ஒவ்வொரு பாத்திரத்தைக் குறிக்கிறது. வண்ணத்தின் இடையே சில குறிகள் இருக்கின்றன அல்லவா? ஒவ்வொரு அடையாளக் குறிக்கும் ஓர் அர்த்தம். இதோ, இந்தக் குறியை கவனி. இந்தக் கதாபாத்திரம், இந்தப் பாத்திரத்துடன் இன்ன விஷயத்தை, இந்த அத்தியாயத்தில் பேசுகிறது. அந்த வேறொரு கட்டத்தில் உள்ள வேறொரு நிறம் வேறொரு உணர்ச்சியைச் சொல்கிறது. இப்படியே என் நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் ஒவ்வொரு பாத்திரமும் என்னென்ன பேசுகிறது, யாருடன் பேசுகிறது, பேசுவதின் விளைவு என்ன என்பது முழுமையாக இந்த சார்ட் மூலம் எனக்குத் தெரிந்துவிடுகிறது. இதை வைத்துக் கொண்டு நாவலை ஒரே மாதத்தில் எழுதி முடித்துவிடுவேன்”

இது கதையில் வரும் நிகழ்ச்சி மட்டுமல்ல. உண்மையிலேயே ப்ராவோ அப்படித்தான் அசோகமித்திரனிடம் சொல்லியிருக்கிறான். அசோகமித்திரனுக்கு அந்தக் காட்சியை – சம்பவத்தை நம்பவே முடியவில்லை. ஒரு நாவலை இப்படி ஒரு கம்ப்யூட்டர் சிப் மாதிரி சுருக்கி வைத்துக்கொண்டு எழுதி முடித்துவிட முடியுமா என்கிற பிரமிப்பு.

நான் கேட்டேன். “உண்மையாகவேவா?”

ஆமாம் என்று அசோகமித்திரன் சொன்னார். “நாம் கூட முயற்சி செய்யலாம் என்று ஒரு சார்ட்டும் சில கலர் பென்சில்களும் வாங்கி, கட்டம் போட்டு ஒரு நாவலை அதில் குறிப்பால் எழுத முயற்சி செய்து பார்த்தேன். முடியவில்லை. என்னால் அதை ஒரு செஸ் போர்டு மாதிரிதான் செய்ய முடிந்தது.”

ஆனால், தன்னுடைய முயற்சியில் பிராவோ வெற்றி பெற்றிருக்கிறான். சொன்னபடி ஒருமாத காலத்தில் அந்த சார்ட்டின் துணையுடன் நாவலை எழுதி முடித்திருக்கிறான்.

ஒரு நாவல் எழுதுவதில் உள்ள சிரமங்கள் புரிந்தவர்களுக்கு இது மிகவும் வியப்புக் கலந்த அதிர்ச்சியைத் தரும். அசோகமித்திரனிடம் தற்செயலாகக் கேட்டேன்: “அந்த நாவலை நீங்கள் வாசித்தீர்களா?”

ஒரு கணம் யோசித்துவிட்டு அவர் சொன்னார்: “ஆம். படித்தேன். சொன்னபடி அவன் சார்ட் துணையுடன் நாவலை முடித்தது உண்மைதான். ஆனால் அது கலாபூர்வமாக வெற்றியடையவில்லை.”

பிராவோவையும் அசோகமித்திரனையும் மட்டுமல்ல. இலக்கியத்தைப் புரிந்துகொள்ளவும் இந்தத் தகவல் உதவக்கூடும்.

O

குறிப்பு: இந்தக் கட்டுரை இப்போது எழுதப்பட்டதல்ல. குறைந்தது இருபது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது.  ‘பின் கதைச் சுருக்கம்’ தொகுப்பில் இது உள்ளது. பல்லாண்டுகளாகப் பதிப்பில் இல்லாதிருந்த இந்தப் புத்தகத்தின் புதிய பதிப்பு இன்று வெளியாகியுள்ளது.

4 thoughts on “கலையும் கட்டங்களும்”

  1. Pingback: பின் கதைச் சுருக்கம் மறு பதிப்பு | Pa Raghavan | பா. ராகவன் Tamil writer

  2. எனக்கு திரு. அசோகமித்திரனை சந்திக்க ஒரு போதும் வாய்ப்பு ஏற்படவில்லை. அவருடைய சில சிறுகதைத் தொகுப்புக்களும், (புண் உமிழ் குருதி)நாவல்களும் வாசித்திருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றிய பல அரிய தகவல்களை தங்கள் மூலமாக அறிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது திரு.ராகவன் அவர்களே. நீங்கள் குறிப்பிட்ட Thought சிற்றிதழ் இப்போதும் வெளி வருகிறதா? படிக்க ஆவலாக உள்ளேன்.

  3. Pingback: ஒற்றன் – அசோகமித்திரன் – சொல்வனம் | இதழ் 258 | 14 நவ. 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *