Skip to content
Home » Blog » கட்டமைப்பு நுட்பம்

கட்டமைப்பு நுட்பம்

#writeRoom பயிற்சி வகுப்புப் பாடங்களில் Book Structuring என்றொரு பாடம் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இந்தப் பயிற்சி வகுப்பு குறித்த முதல் அறிவிப்பினை வெளியிட்ட நாள் தொடங்கி இன்றுவரை தினமும் பத்துப் பேராவது அதைக் குறித்துக் கேட்கிறார்கள். Book Structuring என்றால் என்ன? வடிவமைப்பு, அச்சடித்தல், பைண்டிங், பேக்கிங் போன்றவை குறித்தா?

ஒவ்வொருவருக்கும் ‘இல்லை’ என்று தனித்தனியே பதில் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அதைப் பொதுவில் எழுதிவிடலாமே என்றுதான் இது.

Structuring என்பதைத் தமிழில் நேரடியாகக் கட்டமைத்தல் என்று சொல்லலாம். இது தொகுத்தல் அல்ல. வடிவமைத்தல் அல்ல. வேறெதுவும் அல்ல.

ஒரு புத்தகத்தை எப்படிக் கட்டமைப்பது? அச்சிட்டு பைண்ட் செய்வதையெல்லாம் பதிப்பகத்தார் பார்த்துக்கொள்ளட்டும். ஓர் எழுத்தாளரின் கட்டமைப்பு என்பது எப்படி இருக்க வேண்டும்? இதற்கு நான் மனித உடலை உதாரணமாகச் சொல்வேன்.

நமக்கு ஒரு முகம் இருக்கிறது. அதன் மேற்புறம் உள்ள பகுதியைத் தலை என்கிறோம். மூளை அதற்கு உள்ளாகத்தான் இருக்கிறது. அதுதான் அனைத்திலும் முக்கியம். எனவே மண்டை ஓடு வலுவாக அமைக்கப்படுகிறது. அதற்கும் மேலே முடி முளைத்து மறைத்து நிற்கிறது.

முகத்துக்கு இறங்கினீர்கள் என்றால் இரண்டு கண்கள். அருகருகே அவை அமைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டுக்கும் இடைப்பட்ட வெளியில் மூக்கு முளைத்து நீண்டிருக்கிறது. அதன் நுனியில் இரண்டு துவாரங்கள். அவை சுவாசிப்பதற்கு. அதற்குக் கீழே ஒரு செண்டிமீட்டர் இடைவெளி விட்டு வாய். அது பேசுவதற்கு. பாடுவதற்கு. சாப்பிடுவதற்கு. அனைத்துக்கும். முகத்தின் இரு புறங்களிலும் பக்கவாட்டில் காதுகள். அவை கேட்கும் உறுப்புகள்.

இப்போது ஒரு மாறுதலுக்குக் காதுகள் இருக்கும் இடத்தில் இரண்டு கண்களை மாற்றி வைத்துப் பாருங்கள். அல்லது உச்சந்தலையில் வாய். பின் தலையில் நாசி துவாரங்கள். அட, வெட்டியாகத் தொங்கிக்கொண்டிருக்கும் இரண்டு கரங்களில் ஒன்றைத் துண்டித்து, தலைக்கு மேலே ஒட்ட வைத்தால்தான் என்ன?

பெர்முடேஷன் காம்பினேஷனில் விதவிதமாக மாற்றி யோசித்துப் பாருங்கள். எந்த ஒரு மாறுதலாவது இப்போது இருப்பதைக் காட்டிலும் அதிகப் பலன் தருமா என்று நேர்மையாகச் சிந்தியுங்கள். வாய்ப்பே இல்லை என்பதுதான் கிடைக்கும் பதிலாக இருக்கும்.

Structuring என்பது கட்டமைப்பு. இது இங்கேதான் இருந்தாக வேண்டும்; இது இங்கே இருந்தால்தான் சரியாக இருக்கும் என்று பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு உறுதியாக எடுக்கப்படுகிற முடிவு. எக்காலத்திலும் யாராலும் அது மாற்றப்படக் கூடாது.

புத்தகம் என்பதும் மனித உறுப்புகளைப் போன்றதுதான். ஒரு புத்தகத்தின் எந்தெந்த அங்கம் எங்கெங்கே இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது ஒரு நுட்பம். என்னுடைய ஹிட்லர் நூலில், ஹிட்லரின் மரணம் குறித்த அத்தியாயத்தை முதல் பகுதியாக வைத்தேன். ‘பூனைக்கதை’ நாவலில், கதை மையமான சின்னத்திரை ஷெட்யூல் டைரக்டர் ஒருவனின் வாழ்வனுபவங்களை இரண்டாம் பாகத்தின் இடையில் ஒரு கூடுதல் பகுதி போலச் சொருகி வைத்தேன் (மயில்சாமி கதைகள்). அவன் தான் கதாநாயகன். அவனது கதைதான் எல்லாமே. ஆனால் முதல் பாகத்தில் அவன் பெயர் கூட இருக்காது. ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தில் இரண்டாவதாக வந்திருக்க வேண்டிய பாகத்தைத் தூக்கி இறுதியில் வைத்தார். இறுதி பாகத்தை முன்னால் வைத்தார். ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலின் உயிரைச் சுருட்டி வைத்திருக்கும் பகுதி, அப்புவைப் பார்ப்பதற்கு அம்மா கிராமத்துக்கு வரும் பகுதி. அந்தக் காட்சிக்குப் பிறகு ஒன்றுமே கிடையாது. அல்லது வேறு எது இருந்தாலும் எடுபடாது போயிருக்கும். வேறு எந்த எழுத்தாளரானாலும் அதன் பிறகு எளிய இனிய காதல் காட்சியையெல்லாம் சேர்க்க நினைத்திருக்க மாட்டார். ஆனால் தன் மீதான இந்துவின் காதலை அப்பு மௌனமாக அங்கீகரித்துவிடுகிற தருணத்தை அம்மா வந்து போன பின்பு, இறுதியில் வைத்து நாவலை முடிப்பார் ஜானகிராமன்.

ஏன் இது நிகழ்கிறது? எதனால் இந்தத் தேவை, எழுத்தில் வருகிறது? ஒரு கதையில் அல்லது கட்டுரையில் எந்த அங்கம் எங்கே இருக்க வேண்டும்; எது எங்கே இருந்தால் எடுப்பாகத் தெரியும்; மொத்த நூலின் நோக்கத்தையும் சரியாகக் கடத்திவிடுவதில் இந்தக் கட்டமைப்பின் பங்கு என்ன என்பதைப் பற்றித்தான் இந்த வகுப்பு சொல்லித் தரும்.

இதற்கு மேலே இங்கே விளக்க முடியாது. வகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

3 thoughts on “கட்டமைப்பு நுட்பம்”

  1. கதிரவன் கணேசன்

    பொருத்தமாக அமைக்கப்பட்ட கட்டமைப்பை இங்கு எடுத்துக்காட்டுகளுடன் உரைத்துள்ளீர்கள். நன்று. நன்றி. பொருத்தமின்றி கட்டமைக்கப்பட்டதால் தோல்வியுற்ற படைப்புகள் எதையேனும் எடுத்துக்காட்ட முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *