Skip to content
Home » Blog » எழுத்தில் எப்போது நகைச்சுவை வரும்?

எழுத்தில் எப்போது நகைச்சுவை வரும்?

நகைச்சுவையை எழுத்து வடிவத்துக்கு எது மாற்றும்?

சுமார் இருபதாண்டுக் காலம் இது பற்றி நிறைய யோசித்திருக்கிறேன். நகைச்சுவை என்பது ஓர் உணர்வு. உங்கள் கட்டுப்பாட்டை உடைத்துப் புன்னகை செய்ய வைக்கும் ஒரு கலை. இதற்குச் சில கருவிகள் உள்ளன.

1. முக பாவனை (செந்தில்)
2. உடல் மொழி (நாகேஷ், வடிவேலு)
3. குரல் ஏற்ற இறக்கங்கள் (டி.எஸ். பாலையா, எம்.ஆர். ராதா)
4. வார்த்தை விளையாட்டுகள் (விவேக், சந்தானம்)
5. அபத்தத் தருணங்களின் காட்சி ரூபம் (கே. பாக்யராஜ்)

ஆனால் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் இவை எல்லாமே மேடை மற்றும் திரை வடிவங்களுக்கு மட்டுமே பொருந்தும். எழுத்துக்கு இவை அணுவளவும் உதவாது. அதனால்தான் தமிழில் நகைச்சுவை எழுத்து என்பது பல்லாண்டுக் காலமாக ஒரு செயற்கைத் தயாரிப்பாகவே இருந்து வந்திருக்கிறது. மேடை நாடக வசனங்களைத் தொகுத்து தொடர் கதைகளாக எழுதி விடுவார்கள். அந்தக் கணத்தில் சிரித்துவிட்டு உடனே மறந்து விடக்கூடிய எழுத்து. பாக்கியம் ராமசாமி, ஜே.எஸ். ராகவன் அகஸ்தியன், கிரேசி மோகன் தொடங்கி இந்த வித எழுத்தில் பெரும் வாசகர் பரப்பைக் கொண்டவர்கள் பலர் உண்டு. அவர்களுக்கே தெரியும், அவர்கள் எழுதுவது அந்த நேரத்துக்கு மட்டுமே உரியதென்று. என்றென்றும் புன்னகை செய்ய வைக்கும் எழுத்தாக அவை இருக்க வாய்ப்பே இல்லை.

எக்காலத்துக்குமான நகைச்சுவை எழுத்து என்பது எப்படி இருக்க வேண்டும்? அதன் சூட்சுமத்தை நான் வைக்கம் முகம்மது பஷீரிடம் இருந்துதான் தெரிந்துகொண்டேன்.

எனக்கு மலையாளம் தெரியாது. பஷீரை மொழிபெயர்ப்பில் மட்டுமே படித்திருக்கிறேன். ஆனால் அநேகமாக அவருடைய எண்பது சத எழுத்தைப் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். (நன்றி: காலச்சுவடு பதிப்பகம்) கதை-கலை-மலையாள வாழ்க்கை முறை-அவருடைய அனுபவங்கள் மற்றவை ஒரு புறம் இருக்கட்டும். நகைச்சுவை என்பதை பஷீர் எங்கிருந்து, எப்படிப் பிடிக்கிறார்; அதை எப்படி எழுத்தாக உருமாற்றுகிறார் என்று அவருடைய ஒவ்வொரு படைப்பிலும் உடைத்துப் பார்த்திருக்கிறேன். அதன் அடிப்படையில் குத்து மதிப்பாக ஒரு ஃபார்முலாவை உருவாக்க முயற்சி செய்தேன். அதை இப்படித் தொகுக்கலாம்.

1. பிறர் பேசத் தயங்கும் விஷயங்களை (நம் சொந்த வாழ்வில் இருந்து எடுத்து) தைரியமாகப் பேசுவது

2. நாம் புரியும் அபத்தங்களைப் பொதுவில் வைக்கத் தயங்காதிருப்பது. இது சுய கேலி அல்ல. சுய விமரிசனமும் அல்ல. சுயத்தை அப்படியே எடுத்து வைப்பது.

3. உள்ளார்ந்த தேர்ச்சியும் அக்கறையும் உள்ளவற்றைப் பற்றி மட்டுமே எழுதுவது; கூடியவரை வாழ்க்கை மீதான அதிருப்தி கலந்த விமரிசனம் இல்லாதிருப்பது.

4. எதன் மீதும், யார் மீதும் காழ்ப்போ கசப்போ இல்லாமல் எழுதுவது.

5. மனித குலத்தின் அவலங்கள் அனைத்துக்கும் மனிதர்களே காரணம் என்ற தெளிவும் (கடவுள் அல்ல; விதி அல்ல) அதைச் சீர் செய்யும் முயற்சியைத் தன்னிடம் இருந்தே தொடங்கும் நேர்மையும் கொண்டிருப்பது.

6. நான்காம் வகுப்பு கூடத் தேறாதவன் நம்மை வாசிக்கக்கூடும என்ற விழிப்புணர்வுடன் எழுதுவது (நம்ப முடியாத எளிமை).

7. தத்துவச் சிக்கல்களுக்குள் தலையைக் கொடுக்காதிருப்பது.

8. சித்தாந்தங்களை முழுதாகக் கற்றறிந்து, ஆனால் முழுதும் விலக்கி வைத்துவிட்டு எழுதுவது.

9. அன்றாட வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் கூர்ந்து கவனிப்பது. அதில் உள்ள அற்புதங்களையும் அபத்தங்களையும் கவனமாகக் குறித்து வைத்துக்கொண்டு, அதன் வடிவம் சிதையாமல், மிகையின்றி, அப்படியே எழுதுவது.

10. நெருங்கிய, நம்பகமான நண்பர்களை மட்டும் எழுத்தில் வம்புக்கு இழுத்து, விளையாட்டுக் காட்டுவது.

இப்படியெல்லாம் வகைப்படுத்திவிடக் கூடிய எழுத்து இல்லை அவருடையது. அனைத்து ஃபார்முலாக்களையும் உடைத்துத் தள்ளிக்கொண்டு பாய்கிற பேராறுதான்; அதில் சந்தேகமில்லை. ஆனால் ஆற்றில் ஒரு கை அள்ளிக் குடித்துப் பார்ப்பதில் பிழையில்லை.

பஷீரைப் படித்து – அவரது நகைச்சுவை சார்ந்து நான் புரிந்துகொண்டதன் சாரம் இதுதான். நம்மை நம்மால் ஒளிவு மறைவின்றி எடுத்து வைக்க முடியுமானால் போதும். நகைச்சுவை இயல்பாக அதில் கூடி வந்துவிடும். நாம் வாழும் விதம் எவ்வளவு நகைச்சுவையானது என்பது அப்போது நமக்கே புலப்படும்.

பிகு:- இந்தக் குறிப்பில் வேண்டுமென்றேதான் உதாரணங்களைத் தவிர்த்திருக்கிறேன். பஷீரைத் தேடிப் படியுங்கள். நான் சொல்லியிருக்கும் அனைத்துக்கும் அவரது எழுத்தில் உதாரணங்கள் உண்டு.

பிகு2:- நகைச்சுவை எழுத்து பற்றிய இந்தக் குறிப்பில் ஓரிடத்தில்கூட நீங்கள் சிரித்துவிடக் கூடாது என்ற கவனமுடன் எழுதினேன். நகைச்சுவை எழுத்து என்பதைப் போன்ற சீரியஸ் விஷயம் வேறொன்றில்லை என்பதே காரணம்.

2 thoughts on “எழுத்தில் எப்போது நகைச்சுவை வரும்?”

  1. நகைச்சுவை எழுத்து என்பது சமூகத்தின் மீது நிறுவனத்தின் மீது மனிதனின் பேராசை மீது மனிதனின் அவலங்களின் மீது தாளாத கோபமும் கட்டுக்கடங்காத வெறுப்பு உணர்வின் வெளிப்பாடாக இருக்கும்போதுதான் சிறப்பானதாக வெளிப்படும்.

    எழுத்து,திரை,நாடக வடிவம் எல்லாவற்றிற்கும் இது பொதுவானது.

    மற்றபடி கோணல் முகம், அங்க அசைவு, வெற்று சிரிப்பு என மற்ற அனைத்தும் நகைச்சுவை அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *