Home » Blog » படிக்கக் கடுமையானவற்றைப் படிப்பது எப்படி?

படிக்கக் கடுமையானவற்றைப் படிப்பது எப்படி?

எடுத்தேன்; ஆனால் படிக்க முடியவில்லை என்று பல பேர் பல புத்தகங்களைக் குறித்துச் சொல்லியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

படிக்க ஆரம்பித்துப் பாதியில் நிறுத்திவிட்டேன் என்று இன்றும் ஃபேஸ்புக்கில் நூற்றுக் கணக்கான ஸ்டேடஸ் வெளியாகின்றன.

இந்த ‘படிக்க முடியவில்லை’ என்கிற அறிவிப்பு நிச்சயமாக ஒரு புத்தகத்தின் தரத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல் அல்ல. அது தனி நபர் கருத்து. அவ்வளவுதான்.

ஆகச் சிறந்த நவீன இலக்கியங்களுள் தலையாயதாகக் கருதப்படுகிற தஸ்தாயேவ்ஸ்கியின் ‘கரமஸாவ் சகோதரர்கள்’ நாவலைப் படிக்க முடியவில்லை என்று லட்சம் பேருக்கு மேல் சொல்லிவிட்டார்கள். நேற்றுக்கூட யாரோ ஒருவர் அப்படி எழுதியிருந்ததைக் கண்டேன். ஜெயமோகனின் ‘விஷ்ணுபுரம்’ வெளியானபோது, ‘என்னால் அந்நாவலுக்குள் நுழையவே முடியவில்லை. அதன் கதவுகள் படார் படாரென மூடிக்கொண்டன’ என்று ஜெயகாந்தன் ஒரு கூட்டத்தில் சொன்னார். ‘என்னால் நாலு பக்கம்கூடப் படிக்க முடியாத ஒரே நாவல் ஜேஜே சில குறிப்புகள்’ என்று என்னிடமே பலபேர் சொல்லியிருக்கிறார்கள். ‘வில்லியம் ஃபாக்னர் என்ன எழுதினாலும் போரடிக்கிறது என்று சொல்வதற்காகவே அவர் புத்தகங்களைப் பலர் வாங்கினார்கள்’ என்று அசோகமித்திரன் ஒருமுறை சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார்.

இது ஏன் நிகழ்கிறது?

மிக எளிய காரணங்கள் சில:

நமது சொந்த விருப்ப எல்லைக்கு வெளியே ஒரு படைப்பு இயங்குவதாக இருக்கலாம்.

நமது கருத்தியலுக்கு எதிரான ஒன்றை அது முன்வைக்கலாம்.

நமது மன அமைப்புக்கு ஒவ்வாத, நமது ரசனைக்கு அப்பாற்பட்ட படைப்பாக அது இருக்கலாம்.

மொழி நடை கடுமையானதாக இருக்கலாம்.

படைப்பின் கட்டுமானம் சிக்கல் மிக்கதாக இருக்கலாம்.

தனிப்பட்ட சில காரணங்களால் குறிப்பிட்ட எழுத்தாளரை நமக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.

ஆனால் இவை எதுவுமே ஒரு புத்தகத்தைப் படிக்காமல் இருக்க நியாயமான காரணங்கள் அல்ல.

வாசகர்கள் விஷயம் வேறு. அவர்கள் தமது சொந்த விருப்பத்துக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள். ரசனைக்கு ஒவ்வாததை விலக்கி வைக்க அவர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் எழுத்தாளர்கள், எழுத்தாளர் ஆக விரும்புவோர் இப்படிச் செய்யக்கூடாது. எதையும் படிக்காமல் நிராகரிப்பது எழுத்தில் வாழ்வோருக்கும் வாழ விரும்புவோருக்கும் அடாது.

ஆனால் படிக்க முடியவில்லை. சிரமமாக இருக்கிறது. என்ன செய்யலாம்? கஷ்டப்பட்டாவது படித்துவிட வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே பதில்.

இந்த விஷயத்தை நான் எப்படிக் கையாள்கிறேன் என்று சொல்கிறேன்.

என் தனிப்பட்ட ரசனையின் அடிப்படையில், எனக்கு கம்யூனிஸ்டுகளின் எழுத்து பிடிக்காது. மொழியை அவர்கள் மிகக் கோரமாகக் கையாள்கிறார்கள் என்பது என் அபிப்பிராயம்.

அதே போல, அடிப்படை தமிழ் மொழி அறிவுகூட இல்லாமல் ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்துவிடும் யாருடைய எழுத்தும் பிடிக்காது. ஒரு வரி, ஒரு பத்திகூட ரசிக்க முடியாத பல புத்தகங்களை சிரமப்பட்டுக் கடந்திருக்கிறேன்.

தத்துவ ஜாங்கிரி பிழிவோரை நான் வெறுக்கிறேன். சுய சிந்தனையே இன்றி, மேற்கத்திய சிந்தனை மரபைக் கடன் வாங்கி எழுதப்படும் எந்த எழுத்தும் எனக்குள் இறங்காது.

உத்தி மயக்கங்களுக்கு ஆட்பட்டு எழுதுவோரைப் படிக்க விரும்புவதில்லை. எந்த உத்தியும் இயல்பாக ஒரு படைப்புடன் இரண்டறக் கலந்துவிடுமானால் பிரச்னையே இல்லை. அதைக் கருப்பொருளும் காலத் தேவையும் தீர்மானிக்கும். எழுத்தாளர் தீர்மானிக்கக்கூடாது என்பது என் அபிப்பிராயம்.

இவ்வளவு சிக்கல்கள் எனக்கு இருந்தாலும் படிக்க எடுக்கும் எதையும் நான் முடிக்காமல் விடுவதில்லை. எனக்குப் பிடிக்கவில்லை என்பது ஒரு புத்தகத்தின் தரத்தைத் தீர்மானிக்கும் காரணி அல்ல என்பதே காரணம்.

எனவே இம்மாதிரியான புத்தகங்களைப் படிப்பதற்கு நான் ஒரு வழி கண்டுபிடித்தேன். என் வழக்கமான தினசரிப் பணிகளின் நடுவே, ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒருமுறை குறிப்பிட்ட ‘படிக்க முடியாத புத்தகத்தை’ப் பிரிப்பேன். சரியாக ஐந்து சொற்றொடர்கள் மட்டும் படிப்பேன். ஆனால் மிகவும் கவனமாகப் படித்துவிடுவேன். இப்படிப் படிக்கும்போது ஒரு நாளில் குறைந்தது ஐம்பது சொற்றொடர்களையாவது படித்துவிட முடியும். நான் எப்போதும் ஏழெட்டுப் புத்தகங்களை ஒரே சமயத்தில் படிப்பவன் என்பதால் இது தனித்து கனக்காது. ஓராண்டிலோ, இரண்டாண்டுகளிலோ ஒரு வழியாகப் படித்து முடித்துவிட முடியும்.

அப்படிக் கஷ்டப்பட்டாவது எதற்குப் படிக்க வேண்டும் என்பீர்களானால் என் பதில் ஒன்றுதான். சுற்றி நடக்கிற அனைத்தையும் கவனிப்பது எழுத்தாளனின் தலையாய கடமை. எழுதப்பட்டவற்றுள் முக்கியம் என்று சொல்லப்படுகிற அனைத்தையும் படித்துவிடுவது அதனினும் பெரிய கடமை.

 

 

4 thoughts on “படிக்கக் கடுமையானவற்றைப் படிப்பது எப்படி?”

  1. Kindly good enough to send me the tips from October 1st to my email. I have not received any tips/ notes after September 29th. Just a kind reminder.

  2. நன்றி சார். ஒரு புத்தகத்தை ஏன் படிக்க வேண்டும்? என்பதற்கான காரணத்தை முத்தாய்ப்பாக சொல்லி முடித்துள்ளீர்கள். அருமை சார். கடினமான மொழிநடை காரணமாக இதுவரை படிக்கப்படாமல் நான்கு புத்தகங்கள் என் புத்தக அலமாரியில் உறங்குகின்றன. அவைகளை படிக்க முடிவு செய்துள்ளேன்.

  3. // சுற்றி நடக்கிற அனைத்தையும் கவனிப்பது எழுத்தாளனின் தலையாய கடமை//
    நச்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *