Bukpet-writeRoom எழுத்துப் பயிற்சி வகுப்புகளின் முதல் அணி மாணவர்களுள் ஒருவர் விவேக் சிவகுமார். கதை எழுதப் பயின்ற அனுபவங்களை அவர் இங்கே விவரிக்கிறார்:
O
எல்லோராலும் கதை எழுத முடியும். எல்லோராலும் சிறப்பாக எழுத முடியுமா? முடியும் என்ற நம்பிக்கையை பாராவின் Bukpet-writeRoom வகுப்பு தந்திருக்கிறது.
எது கதை ஆகிறது, எப்பொழுது நல்ல கதை ஆகிறது, எப்படிக காலம் கடந்து நிற்கிறது, அதற்கான கட்டமைப்பு என்ன என்பதைச் சொல்லித் தர ஆள் இல்லை. இது ஒரு புத்தகம் மூலமாகவோ, யூ டியூப்பில் பார்த்தாலோ இந்த அளவிற்கு மனத்தில் பதிந்திருக்குமா என்றால், நிச்சயம் இல்லை.
எது போன்ற சம்பவங்கள் கதை ஆகின்றன, காலம் கடந்து நிற்கின்றன என்பதற்கான பாராவின் உதாரணங்கள் உண்மையாகவே என்னை பிரமிக்க வைத்தன. எத்தனைக் கதைகள், எத்தனை மேற்கோள்கள்! கதையில் அடுக்குகள் (Layers) என்றால் என்ன, அதை அடுக்குவது-வடிவமைப்பது எப்படி என்பது போன்ற மைக்ரோ அம்சங்களையும் புட்டுப் புட்டு வைத்து விட்டார்.
மிக மிக முக்கியமான விஷயம். ஆள் கிடைத்து விட்டார்கள், அவர்களை வைத்து ஒரு கதா காலட்சேபம் பண்ணலாம் என்றில்லாமல், ஒரு கலந்தாய்வைச் செய்வது எப்படி என்று பாரா ஒரு புத்தகமே எழுதலாம். அதேபோல் கிடைத்த நேரத்தில் சொந்தப் பெருமை பேசாமல், சக எழுத்தாளர்களின் கதைகளை வைத்தே இந்த வகுப்பை நடத்தியது, பாராட்டுக்குரியது.
ஏற்கெனவே தமிழ் படிப்போர் எண்ணிக்கை மெல்லக் குறைந்து வருகிறது. ஹிந்தி வேறு கதவைத் தட்டியபடியே நிற்கிறது. இதில் கதை எழுதினாலும் யார் படிப்பார்கள்? இந்தக் கேள்விக்கான விடை, நல்ல கதை வெல்லும் என்பதில் ஒளிந்துள்ளது.
ஆனால் எது நல்ல கதை? நாம் ஒரு கதை எழுதுகிறோம், நாலு பேருக்கு அனுப்புகிறோம், அவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ, நம் முகத்துக்காகவாவது நன்றாக இருக்கிறது என்று சொல்லக்கூடும். இதனால், நாம் எழுத்தில் கோட்டை விடுகிறோமா இல்லையா என்றே தெரியாமல் சுற்றித் திரிவோம். எழுத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்த ஒரு குரு தேவை. அது இந்த வகுப்பின் மூலமாக எனக்கு நிறைவேறியது.
அரை நொடி தாண்டி ஒரே விஷயத்தில் நிற்பதில்லை என்ற முடிவுடன் இருக்கும் இன்றைய இளைய தலைமுறைக்குப் பிடித்தாற்போலக் கதை இல்லை என்றால், எழுதுவதில் பயன் இல்லை. அவர்களுக்காக, இந்த வகுப்பின் மூலம் கற்ற வித்தைகளை மொத்தமாக இறக்கிக் கதை எழுதுவது என்று முடிவு செய்து விட்டேன்.