Home » Blog » பாதி கிணறு

பாதி கிணறு

ஒரு நாவல் எழுத ஆரம்பித்தேன். முன்னூறு பக்கங்கள் தாண்டிவிட்டது. ஆனால் முடிக்க முடியவில்லை.

ஒரு புத்தகம் எழுத ஆரம்பித்து பாதி எழுதிவிட்டேன். ஏனோ இழுத்துக்கொண்டே இருக்கிறது. முடிக்க வரமாட்டேனென்கிறது.

கிடப்பில் போட்டதை மீண்டும் எடுத்து, தொடர வேண்டும். ஏனோ தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.

பிரமாதமான ஒரு யோசனை இருக்கிறது. உட்கார்ந்து எழுதத்தான் வேளை அமைவதில்லை.

அநேகமாக ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவர் என்னிடம் இவற்றில் ஒன்றைச் சொல்கிறார். அல்லது இம்மாதிரி ஏதோ ஒன்று. தொடங்கிய காரியமோ, தொடங்க நினைக்கும் காரியமோ தொடர்வதிலும் முடிவதிலும் உள்ள சிக்கல்கள். எழுத்துக்குப் புதியவர்கள்தாம் என்றில்லை. நன்கு கை பழகிய எழுத்தாளர்களில் பலருக்கே இந்தப் பிரச்னை இருக்கிறது. இதற்கு மனத்தடை, writers’ block, வேலை அதிகம், வாழ்க்கைப் பிரச்னைகள் அதிகம் என்று பல காரணங்கள் சொல்லப்படும்.

உண்மையான காரணம் அவை எதுவுமே அல்ல. நாம் எளிதில் விட்டுக் கொடுக்கக்கூடிய ஒரு விஷயம், நமது மன முனைப்பு. கழுத்துக்குக் கத்தி வைக்காத எதையும் பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நினைப்பது மனித சுபாவம். இன்றே எழுதி முடிக்காவிட்டால் யாரும் தலையைச் சீவிவிடப் போவதில்லை. நாளை எழுதினால் என்ன என்று ஒவ்வொரு நாளும் நினைப்பதன் விளைவுதான் என்றுமே எழுதி முடிக்காமல் போக வழி வகுக்கும்.

எழுத்துக்கு என்றல்ல. எல்லா செயல்களுக்குமே இதுதான் காரணம்.

ஆனால் எழுத்தில் இதன் வீரியமும் பாதிப்பும் மிக அதிகம் இருக்கும். ஏனெனில் எழுத்து என்பது ஓர் அன்றாடப் பயிற்சி. ஒரு நாள் இடைவெளி விட்டாலும் தொடர்ச்சியில் சுருதி கூடாது. இருபது வருடங்கள் இடைவெளி விட்டு மீண்டும் எழுத வந்து சாதித்த எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் நிறையக் கதை சொல்வார்கள். அவர்களெல்லாம் பெரியவர்கள். விழுந்து சேவித்துவிட்டு நகர்ந்துவிட வேண்டும். நாமும் இருபது வருட இடைவெளி விட்டு எழுதினாலும் விட்ட இடத்தில் இருந்து தொடர முடியும் என்று நம்பாதீர்கள். சத்தியமாக நடக்காது.

எழுத்தில் மிக அதிகம் சாதித்த யாரும் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு குறிப்பிட்ட அளவு எழுதுவதை வழக்கமாக, கடமையாக, நிபந்தனையாக விதித்துக்கொண்டவர்கள்தாம். அப்படிச் செய்தால்தான் முடியும். எழுதத் தொடங்கியதை முடிப்பதற்கு வேறு குறுக்கு வழியே கிடையாது.

நான் நிறைய எழுதுவது குறித்து எப்போதும் ஆற்றாமையுடன் பேசும் ஒரு பெண் எழுத்தாளர் ஒரு சமயம், ‘நீங்கள் பெண்ணாக இருந்து பார்த்தால்தான் எழுத முடியாமலேயே போவதற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள முடியும்’ என்று சொன்னார்.

நான் பெண்களின் சிரமங்கள் அறியாதவன் அல்ல. படுக்கையில் கண் விழித்து எழுவது முதல், இரவு மீண்டும் படுக்கச் செல்லும் வரை வீட்டிலும் அலுவலகத்திலும் அவர்களுக்கு ஓயாத பணிகள் இருக்கும். உண்மையில், இந்தியச் சூழலில் ஓர் ஆணைக் காட்டிலும் அதிக வேலை செய்பவள் பெண்தான். இதில் எனக்கு சந்தேகமே இல்லை.

நான் கேட்டேன், ‘இவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவிலும் எழுத வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? அந்த எண்ணத்தை விட்டுவிடலாமே?’

அது முடிவதில்லை; எழுத வேண்டும் என்ற ஏக்கம் எப்போதும் பொங்கிப் பொங்கி வருகிறது என்று சொன்னார்.

கணப் பொழுதும் யோசிக்காமல் கேட்டேன், ‘உங்களுக்கு மொபைலில் மெசேஜ் டைப் செய்யத் தெரியுமல்லவா?’

‘தெரியும். அது தெரியாமல் என்ன?’

‘ஒரு நாளில் இரு வேளை – குறைந்தது பத்து நிமிடங்களாவது டாய்லெட்டில் இருப்பீர்கள் அல்லவா?’

‘ஆம். அது இல்லாமல் எப்படி?’

‘அப்படியானால் அந்தப் பத்து நிமிடங்களை மட்டும் எழுதுவதற்கு ஒதுக்குங்கள். அதை ஒரு கடமை ஆக்கிக்கொள்ளுங்கள். டாய்லெட்டில் பத்தே பத்து நிமிடங்கள் எழுதுவதற்காக நாள் முழுதும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் யோசித்து வைத்துக்கொள்ளுங்கள்.’

இதெல்லாம் நடக்கிற கதையே இல்லை என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஆனால் எனக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. அந்தக் கணத்தில், அவருக்காகச் சொன்னதுதான். ஆனால் நானே முயற்சி செய்து பார்த்தால் என்ன என்று தோன்றியது. மறுநாளே ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் டாய்லெட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் ஒரே ஒரு ட்விட் அல்லது ஸ்டேடஸ் அப்டேட். அது நகைச்சுவையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே நான் விதித்துக்கொண்ட சட்டம்.

கிட்டத்தட்ட முன்னூறு நாள் அதை ஒழுங்காகச் செய்தேன். யாருக்கும் சொல்லவில்லை. எப்போதும் போல என் ஃபேஸ்புக் அப்டேட்டுகள் வந்துகொண்டிருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒன்றிரண்டு ஸ்டேடஸ்கள் மட்டும் டாய்லெட்டில் எழுதியவையாக இருக்கும்.

எழுதியதில் கணிசமான அளவு தேறிய பிறகு எடுத்து வைத்துக்கொண்டு மொத்தமாக எடிட் செய்து தொகுத்தேன். சுமார் என்று தோன்றியவற்றை நீக்கிவிட்டு மிச்சத்தை ஒரு புத்தகமாக்கினேன். அதுதான் ’14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள்.’

அலுவலகம், வீடு, உறவுகள், நட்புகள், கையிருப்பு, கடன்கள், கவலைகள் எல்லாம் இல்லாத மனிதர்கள் யாருமில்லை. இவை அனைத்தாலும் பாதிக்கப்படும் முதல் அப்பாவியாக எழுத்து இருந்துவிடக்கூடாது என்ற எண்ணம் முக்கியம். அது இருந்துவிட்டால், ஆரம்பித்த எதுவும் பாதியில் நிற்காது.

5 thoughts on “பாதி கிணறு”

  1. சந்திரமோகன்

    பாதி கிணறுன்னு சொல்லி முழு கிணறு தாண்டும் வித்தை சொல்லித்தருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *