அன்பின் பாரா, தினமொரு குறிப்பு ஏன் தினமும் வருவதில்லை?
கடந்த வாரம் சுமார் நூறு மின்னஞ்சல்களாவது இதனைக் கேட்டு வந்துவிட்டன. மிகக் கடுமையான வேலைப் பளு என்பது மட்டும்தான் காரணம்.
என்ன வேலை இருந்தாலும் இரவு படுக்கப் போகும் முன்னர் இதனை எழுதிவிட வேண்டும் என்றுதான் திட்டமிட்டேன். ஆனால் கை துவண்டு, கண் சொருகும் வரை வேறு ஏதோ ஒரு வேலை இழுத்துப் பிடித்துக்கொண்டுவிடுகிறது. எப்போதாவது இப்படி நேரும். இம்முறை இன்னும் இரண்டொரு தினங்களில் சரியாகி விடுமென்று நினைக்கிறேன். #byngeவில் எழுதிக்கொண்டிருக்கும் மீண்டும் தாலிபன் தொடர் அடுத்த திங்கள் கிழமையுடன் நிறைவடையும். அதன் பிறகு நிறைய நேரம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
நிற்க. தினம் ஒரு குறிப்பை நான் மட்டும்தான் எழுத வேண்டும் என்பதில்லை. இடைவிடாமல், எழுதுவதில் பயிற்சி செய்துகொண்டிருக்கும் யார் வேண்டுமானாலும் அவர்களுடைய அனுபவங்களின் அடிப்படையில் எழுதலாம் என்று தோன்றுகிறது. அவை நன்றாக இருந்தால் இங்கே பிரசுரிக்கப்படும். உங்கள் குறிப்புகளை admin@bukpet.comக்கு அனுப்பலாம்.
எழுத்து என்பது ஒரு தொடர் செயல்பாடு. நிறைய தடுமாற்றங்களும் அலைக்கழிப்புகளும் நிராகரிப்புகளும் சலிப்புற வைக்கும் சம்பவங்களும் வழியில் எதிர்ப்படும். அனைத்தையும் இடக்கரத்தால் நகர்த்திவிட்டு, தொடர்ந்து நமது பணியைச் செய்துகொண்டிருப்பது ஒன்றுதான் இதில் உச்சம் தொட நானறிந்த ஒரே வழி. அப்படிப்பட்ட சலிப்பு தட்டும் மனநிலையை மாற்றி, எழுத்துச் செயல்பாட்டில் உற்சாகம் கொள்ள வைக்கும் விதமான குறிப்புகளைத்தான் இங்கே தொடர்ந்து தர வேண்டும் என்று விரும்புகிறேன். இதனைத் தொடர்ந்து வாசித்து வரும் / எழுத்துப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் யாரும் அதனைச் செய்யலாமே?
பல வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அப்போது நான் கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். கதைகள் படித்துத் தேர்ந்தெடுப்பது அங்கே எனக்குத் தரப்பட்டிருந்த பணிகளுள் ஒன்று. ஒவ்வொரு நாளும் தபாலில் வரும் நூற்றுக் கணக்கான கதைகளைக் கூடிய வரை மறுநாளுக்குள் படித்துவிட வேண்டும் என்பது என் திட்டம். ஓரளவு அதனைச் சரியாகவே செய்து வந்தேன். நூறு கதைகள் படித்தால் இரண்டு அல்லது மூன்று கதைகள் பிரசுரத்துக்குத் தேர்வாகும் தரத்தில் கிடைக்கும். ஒரு வாரம் முழுதும் படித்தால் அதிகபட்சம் பதினைந்து கதைகள் தேர்வாகும். பதினைந்து கதைகள் என்பவை 4-5 இதழ்களுக்குப் போதுமானவை.
அப்படிக் கதை படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஓர் எழுத்தாளர் தினமும் இரண்டு கதைகள் அனுப்புவார். இரண்டும் தனித்தனி அஞ்சல் கவர்களில் வரும். இரண்டு கவர்களின் உள்ளேயும் நிராகரிக்கப்பட்டால் திருப்பி அனுப்ப உரிய தபால் தலைகளும் வைத்திருப்பார். வாரம் பத்து கதைகள். மாதம் நாற்பது கதைகள். இதில் மிகையே இல்லை. ஆண்டுக்கு அவர் குறைந்தது 450 கதைகள் அனுப்பிக்கொண்டிருந்தார்.
துரதிருஷ்டவசமாக, அவர் அனுப்பிய கதைகளில் ஒன்றைக்கூட என்னால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. எல்லா கதைகளிலும் ஏதோ ஒரு பிரச்னை அவசியம் இருக்கும். பிரசுரிக்க முடியாத அளவுக்குத் தடுத்து நிறுத்தும் பிரச்னை. ஆனால் எனக்கோ, அவரது ஆர்வத்தை வேரோடு அழித்துவிடும்படியாக அசம்பாவிதம் ஆகிவிடக்கூடாதே என்ற கவலை. எழுபது சதவீதம் சரியாக இருந்து மிச்சத்தில் சிக்கல் என்றால்கூட நான் மாற்றி எழுதிக் கதையைப் பிரசுரம் செய்துவிடலாம். ஆனால் அதற்கும் அவர் இடம் தரவேயில்லை. ஒரே அவசரம். கதையை எழுதி அனுப்புவது ஒன்றே நோக்கம். அது நன்றாக இருக்கிறதா என்று படித்துப் பார்க்கமாட்டார். பிழைகளைக் களைய மாட்டார். மொழியைச் செப்பம் செய்ய மாட்டார். கையெழுத்துகூட படிக்க முடியாதபடியாகத்தான் இருக்கும். ஆனால் தினமும் இரண்டு கதைகள் என்ற இலக்கை மட்டும் அவர் என்றுமே விட்டுத் தந்ததில்லை.
நான் அவரைச் சந்தித்ததில்லை. ஆனால் சந்திக்க மிகவும் விரும்பினேன். அந்தளவு கதை எழுதும் ஆர்வமும் வெறியும் கொண்ட இன்னொருவரை என் வாழ்நாளில் நான் கண்டதேயில்லை. அவருடைய ஒன்றிரண்டு கதைகளை மட்டுமாவது எப்படியாவது பிரசுரிக்க ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆசிரியரிடமும் கலந்து விவாதித்தேன். அவரும் நான் கேட்டுக்கொண்டதால் சில கதைகளைப் படித்துப் பார்த்தார். பிறகு, ‘இவருடைய எண்ணிக்கை வெறி தணிந்தால்தான் கதை பிரசுரத் தரத்தில் வரத் தொடங்கும்’ என்று சொல்லிவிட்டுத் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
நிச்சயமாக ஓராண்டுக் காலம் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். தினமும் இரண்டு கதைகள் வீதம் அவர் அனுப்பிக்கொண்டே இருந்தார். நானும் வேறு வழியின்றி அனைத்தையும் நிராகரித்துத் திருப்பி அனுப்பிக்கொண்டே இருந்தேன். கடைசியில் அவரிடம் இருந்து ஒரு கதையும் அதனோடு ஒரு கவரிங் லெட்டரும் சேர்ந்து வந்தது.
‘இதையும் நீங்கள் பிரசுரிக்க மாட்டீர்கள் என்று தெரியும். இருந்தாலும் அனுப்புகிறேன். இதுதான் கல்கிக்கு நான் அனுப்பும் கடைசிக் கதை.’
எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. அவரது கதைகள் எங்கே தடுக்குகின்றன, அவற்றில் என்ன பிரச்னை, எதனால் அவர் விவரிக்கும் சம்பவங்கள் கதையாக உருப்பெறுவதில்லை என்றெல்லாம் எனக்குத் தெரிந்த அளவில் விளக்கி ஒரு பதில் எழுதினேன். சிறிது இடைவெளி விட்டு, இன்னும் நிதானமாக, இன்னும் நேர்த்தியுடன், மேலும் தெளிவாகச் சிந்தித்து எழுதினால் நிச்சயம் அவரது கதைகள் பிரசுரமாகும் என்று இறுதியில் குறிப்பிட்டேன்.
அவரிடம் இருந்து ஒரு பதில் வந்தது. ‘உங்கள் பதிலுக்கு நன்றி. ஆனால் இடைவெளி விட்டு எழுத ஆரம்பித்தால் நான் எழுதவே மாட்டேன். எனக்கு எழுதிக்கொண்டிருப்பதுதான் முக்கியம். பிரசுரமானால் மகிழ்ச்சி. அவ்வளவுதான்’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
நெடு நாள்களுக்குப் பிறகு வேறொரு இதழில் அவருடைய ஒரு சில கதைகள் பிரசுரமாகியிருந்ததைக் கண்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. பிறகு ஒரு தொகுப்புகூட வந்ததாக நினைவு. ஆனால் அதன் பின் ஒன்றுமில்லை. இன்றுவரை அவர் இருக்கும் இடமே தெரியவில்லை.
அந்த நண்பர் கடைப்பிடித்த தினசரி ஒழுக்கத்துடன் நேர்த்தியான எழுத்து என்னும் இலக்கும் இணையுமானால் பல அற்புதங்கள் நிகழ்த்த முடியும். யோசித்துப் பாருங்கள்.