மின்னபொலீஸ் டிரிப்யூன் என்ற இதழின் செய்தியாளர் ஆர்நால்ட் சாமுவேல்சனுக்கு எர்னஸ்ட் ஹெமிங்வே அளித்த ஒரு நேர்காணலின் ஒரு பகுதி இது. எழுதுபவர்களுக்கு மிகவும் உதவக்கூடிய சில குறிப்புகள். இனி ஹெமிங்வே:
எழுதுவதைப் பற்றி நான் முக்கியமாகத் தெரிந்துகொண்டது, ஒரே நேரத்தில் நிறைய எழுதக்கூடாது என்பதுதான்.
உள்ளதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடக்கூடாது. எப்போதும் மறுநாளைக்குக் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்கவேண்டும். எழுத்தை எப்போது நிறுத்துவது என்று தெரிந்துவைத்திருப்பது மிகவும் முக்கியமானது. இருப்பதெல்லாம் எழுதித் தீரட்டும் என்று காலியாகும்வரை காத்திருக்கக்கூடாது. சுவாரசியமாக எழுதிக்கொண்டிருக்கும்போதே, சரியான ஓர் இடத்தைத் தொட்டவுடன், இதற்கடுத்து என்ன வரப்போகிறது என்று தெரியும்பட்சத்தில் எழுதுவதை நிறுத்திவிட வேண்டும். நிறுத்தியபின் அதைப் பற்றி யோசிக்கவே கூடாது. இவ்வாறு எழுதினால் நீ எழுதுவது சுவாரசியமாக இருக்கும்.
எழுதி முடித்ததும் அதிலிருந்து எதையெல்லாம் வெளியே எடுக்கமுடியுமோ அதையெல்லாம் நீக்கிவிடவேண்டும்.
எழுத்து நிறைய இயந்திரத்தனமான வேலைகளை உள்ளடக்கியது என்பதால் சோர்வடைந்துவிடக் கூடாது. அந்த வேலைகளைச் செய்துதான் ஆகவேண்டும். சமாளிக்க முடியும். A farewell to armsன் முதல் பகுதியை நான் குறைந்தபட்சம் ஐம்பது முறையேனும் திருப்பி எழுதியிருப்பேன். முதல் தடவை எழுதுவதெல்லாமே குப்பையாகத்தான் இருக்கும். திரும்பத்திரும்ப எழுதித்தான் சரிசெய்ய வேண்டும்.
உங்கள் ஒவ்வொரு படைப்பும் முந்தையதிலிருந்து மேம்பட்டிருக்க வேண்டுமென்பது அவசியம்.
உங்களுக்குத் தெரியாதது பற்றி எழுதக்கூடாது. நீங்கள் எழுதக்கூடிய ஊரைப்பற்றியும் மனிதர்களைப் பற்றியும் முழுமையாக அறிந்திருக்கவேண்டும். அவ்வாறில்லையெனில் உங்கள் கதை வெற்றுவெளியில் நடப்பதுபோலாகிவிடும். எழுத எழுத புதிய விஷயங்களைத் தானே கண்டுகொள்வீர்கள்.
மேலான படைப்புகளெல்லாம் முன் திட்டங்களின்றித் தொடங்கப்பட்டவையே.
எப்போதும் வாழும் எழுத்தாளர்களுடன் போட்டியிடக்கூடாது.அவர்கள் சிறந்த எழுத்தாளர்களா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது. இதனால், மறைந்த எழுத்தாளர்களுடன் தான் போட்டியிடவேண்டும். அவர்களது சிறப்பான படைப்புகளை நீங்கள் கடந்து செல்லும்போதுதான் நீங்கள் நன்றாக எழுதுகிறீர்கள் என்று சொல்லமுடியும்.
இதுவரை எழுதப்பட்ட எல்லா சிறந்த படைப்புகளையும் ஒருமுறையேனும் வாசித்துவிடுங்கள். என்னவெல்லாம் எழுதப்பட்டிருக்கின்றன என்று தெரிந்துகொள்வது முக்கியம். ஏற்கெனவே எழுதப்பட்ட ஒன்றுபோல் உங்களிடமும் ஒரு கதை உண்டானால், முன்னதைவிட சிறப்பாக எழுதமுடியாத பட்சத்தில் அதை விட்டுவிடவேண்டும்.
கலையில் திருட்டு என்பது அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஆனால் திருடப்படுவதை சிறப்பாக செய்யமுடிகிறபோதுதான் அந்த அனுமதி செல்லுபடியாகும்.
யாருடைய பாணியையும் பின்பற்றாதீர்கள். உங்களுக்கென்று ஒரு பாணி அமைந்துவிடுமானால், அது அதிர்ஷ்டமே.
நிறைய எழுதவேண்டுமானால் தீவிரம் முக்கியம். கலையின் உச்சம், புனைவில்தான் உள்ளது.
– எர்னஸ்ட் ஹெமிங்வே