சரி, எழுதுவோம் என்று முடிவு செய்து ஆரம்பித்ததற்கும் முதல் பிரசுரத்துக்கும் நடுவே எனக்கு மூன்றாண்டுகள் இடைவெளி இருந்தது. சிலருக்கு இன்னும் குறைவாக இது இருக்கலாம். வேறு சிலருக்கு அதிகமாக.
எழுத்தில் முதல் பிரசுரம் என்பது பஸ் வந்து நிற்கும்போது ஜன்னல் வழியாகத் துண்டு போட்டு இடம் பிடித்து வைப்பது போன்றது. அநேகமாக இடம் உறுதி. ஆனால் கூட்டத்தில் முண்டியடித்து ஏற வேண்டியது நம் பொறுப்பு. நமக்கு முன்னால் ஏறிவிட்டவர்கள், நாம் போட்டு வைத்த துண்டை அதே ஜன்னல் வழியே வெளியே போட்டுவிட்டு ஒன்றுமே தெரியாதது போல அமர்ந்து உறங்க ஆரம்பித்திருக்கலாம். சண்டை போட வலு இருக்க வேண்டும்.
பிறருக்கு வாய்க்காத ஒரு வசதி எனக்கு. பிரசுரம் நடந்தபோதே, சற்றேறக் குறைய அதே காலக்கட்டத்தில் பத்திரிகை வேலையும் அமைந்துவிட்டது. இதன் நிகர லாபம், பிரசுரம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்கிற ஞானம். இது சற்றுக் குழப்பம் தரலாம். விளக்குகிறேன்.
எழுதத் தொடங்கிய காலத்தில், அச்சில் பெயர் பார்ப்பது என்னும் வேட்கை எல்லோருக்கும் இருக்கும். எனக்குச் சிறிது அதிகமாகவே இருந்தது. பெயரும் கதையும் வெளியாகிவிட்டால் பின்னர் உலகப் புகழ் உறுதி. அதில் எனக்கு சந்தேகமே இல்லை. ஆனால் எது பிரசுரமாகும், எது நிராகரிக்கப்படும் என்ற தெளிவு அன்று எனக்கு இல்லை. இன்னொன்று, தரம் – தரமற்றது என்ற மதிப்பீடு பத்திரிகைக்குப் பத்திரிகை மாறக் கூடியது என்பதும் தெரிந்திருக்கவில்லை. நூற்றுக் கணக்கான கதைகள் பல்வேறு பத்திரிகைகளில் நிராகரிக்கப்பட்டபோது, அனைவரும் நிராகரிப்பதற்கான பொது அம்சம் அக்கதைகளில் என்ன என்று நான் சிந்தித்திருக்க வேண்டும். மாறாக, ஒரு பத்திரிகை நிராகரிக்கும் கதையை இன்னொரு பத்திரிகைக்கு அனுப்புவேன். அவர்களும் நிராகரிக்கும்போது வேறொருவருக்கு அனுப்புவேன்.
பிரசுரம்தான் நோக்கமாக இருந்ததே தவிர, ஒரு சரியான கதையை எழுத வேண்டும் என்பது இல்லை. ஒரு கதையை ‘உற்பத்தி‘ செய்ய முடியாது; அது தன்னியல்பாக எழுந்து வரும் என்பதும் அன்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
ஒரு சம்பவம். குரோம்பேட்டையில் இருந்து சென்னை கடற்கரைக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தேன். இரண்டு பேர் அந்தப் பெட்டியில் பிச்சை எடுக்க ஏறினார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் அடைந்து கிடந்த அப்பெட்டியில் அந்த இருவருக்கும் சில்லறை தந்தவர்கள் ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். கண்ணில் பட்ட காட்சிதான். அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றபோது அவர்கள் இருவரும் இறங்கி, அடுத்தப் பெட்டியில் ஏறியதைக் கண்டேன்.
ஒரு ரயிலில் பன்னிரண்டு பெட்டிகள். தாம்பரத்தில் இருந்து கடற்கரையை அடையும் வழியில் மொத்தம் பதினெட்டு ஸ்டேஷன்கள். சராசரியாக, பெட்டிக்கு ஐந்து ரூபாய் என்றால் ஒரு ரயிலில், ஒரு பயணத்தில் அதே சராசரியாக ஐம்பது ரூபாய். போக வர நூறு ரூபாய் என்று வைத்துக்கொண்டால், ஒரு நாளில் அதிகபட்சம் இருபது முறை தாம்பரம் முதல் கடற்கரை வரை சென்று திரும்பினால் சராசரியாக இரண்டாயிரம் ரூபாய் வருமானம். இதுவே மாதம் அறுபதாயிரம் ரூபாய் ஆகி விடுகிறது.
இந்தப் பிச்சைக்கார வாழ்க்கைதான் எவ்வளவு வசதியும் வளமும் ஆனது? நான் அப்போது லிங்கிச் செட்டி தெருவில் இருந்த அமுதசுரபியில் பயிற்சி நிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். மாதச் சம்பளம் நாநூறு ரூபாய். பயணப் படி அறுபது ரூபாய்.
இந்த இரண்டையும் ஒப்பிட்ட கணத்தில் அதை ஒரு சிறுகதையாக்கி விடலாம் என்று தோன்றியது. அச்சில் வெளியான என்னுடைய முதல் சிறுகதையும் அதுதான்.
நெடுநாள்களுக்குப் பிறகு அந்தக் கதை ஏன் பிரசுரமானது என்று எடுத்து வைத்துக்கொண்டு ஆராய்ந்தபோது ஒரு காரணம் கிடைத்தது. ஒரு ரயில் பிச்சைக்காரரின் அன்றாடத்தில் ஒரு பகுதியை நான் உற்றுப் பார்த்திருக்கிறேன். ஒரு பகுதிதான். ஆனால் முழுமையாக. தீவிரமாக. தவிரவும் துல்லியமாக. இல்லை என்று மறுக்கவே முடியாது. ஏனெனில், அந்தக் கதைக்கான கரு மனத்தில் விழுந்த மறுநாளே நான் அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லிவிட்டு நாளெல்லாம் ரயிலில் சுற்றினேன். தாம்பரத்தில் ஒரு குறிப்பிட்ட பிச்சைக்காரரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அன்று முழுதும் அவரைப் பின் தொடர்ந்தேன். அவரது ஒருநாள் வருமானம் என்பதை நான் குத்து மதிப்பாகத்தான் இரண்டாயிரம் என்று அமைத்துக்கொண்டேன். உண்மையில் அதைக் காட்டிலும் அதிகமாகவே அன்று அவர் சம்பாதித்தார்.
அந்த ஒரு நாள் உழைப்புக்குக் கிடைத்த பரிசுதான் அந்தப் பிரசுரம்.
ஆனால் அது ஒரு நல்ல கதையா என்றால், நிச்சயமாக இல்லை. நான் அவரது வாழ்க்கை முறையைக் கவனித்திருக்க வேண்டும். நண்பர்களை கவனித்திருக்க வேண்டும். அவர்களுக்குள் பேசிக்கொள்வதை கவனித்திருக்க வேண்டும். அவர் எங்கே உண்கிறார், எங்கே உறங்குகிறார், குடும்பம் எது, குழந்தைகள் எத்தனைப் பேர், என்ன படிக்கிறார்கள் அல்லது அவர்களும் பிச்சைதான் எடுக்கிறார்களா என்றெல்லாம் பார்த்திருக்க வேண்டும். மாதம் அறுபதாயிரம் என்பது அன்றைக்குச் சிறிய தொகை அல்ல. அந்தப் பணத்தை அவர் என்ன செய்கிறார் என்று கவனித்திருக்க வேண்டும்.
அதைத்தான் ஏழாம் உலகத்தில் ஜெயமோகன் செய்தார். பிறகு அதுவேதான் ‘நான் கடவுள்‘ திரைப்படமும் ஆனது. பிச்சை ஒரு தொழில் துறை என்ற தகவல் அளித்த அதிர்ச்சி சிறிதல்ல. சொல்லொணா வேதனைகளின் பிள்ளைகளாயினும் வாழக் கிடைக்கும் ஒவ்வொரு கணத்தையும் புன்னகையுடன் வாழ்ந்து கடக்கும் அவர்களது வேட்கை அதில் எப்படிக் கலை ஆனது என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு நல்ல கதைக்கான நியாயமான உழைப்பு எத்தகையது என்பது புரிந்துவிடும்.
பத்திரிகையில் ஒரு கதை பிரசுரமாக ஒரு சிறு புத்திசாலித்தனம் எழுத்தில் இருந்துவிட்டால் போதும். ஆனால் ஒரு நல்ல கதை எழுதுவதற்கு, இந்த மனித குலத்தின் மீது பெய்த முதல் மழையின் ஈரம் மனத்தில் என்றும் நிலைத்திருக்க வேண்டும்.
இது புரிந்ததால்தான், பிரசுரம் ஒரு பெரிய விஷயமில்லை என்ற முடிவுக்குத் தொடக்கத்திலேயே வர முடிந்தது.
(விரைவில் வெளிவர இருக்கும் ‘எழுதுதல் பற்றிய குறிப்புகள்’ புத்தகத்தில் இருந்து)